2017-04-26 16:26:00

குண்டு துளைக்காத வாகனம் வேண்டாம் - திருத்தந்தை


ஏப்.26,2017. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எகிப்து நாட்டில் மேற்கொள்ளும் திருத்தூது பயணத்தின் போது, குண்டு துளைக்காத வாகனத்தில் பயணிப்பதை விரும்பவில்லை என்பதால், சாதாரண வாகனங்களிலேயே அவர் பயணிப்பார் என்று வத்திக்கான் செய்தித் தொடர்பாளர், Greg Burke அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

ஏப்ரல் 28, 29, வருகிற வெள்ளி, மற்றும் சனிக்கிழமைகளில் திருத்தந்தை மேற்கொள்ளும் 18வது திருத்தூதுப் பயணம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய Burke அவர்கள், திருத்தந்தையின் எகிப்து பயணம், மேய்ப்புப்பணி, கிறிஸ்தவ ஒன்றிப்பு, மற்றும் பல்சமய உறவு என்ற மூன்று பண்புகளைக் கொண்டிருக்கும் என்று கூறினார்.

அண்மையில் எகிப்தில் நிகழ்ந்த வன்முறை நிகழ்வுகளுக்குப் பின்னரும், திருத்தந்தை அமைதியான மனநிலையோடு அந்நாட்டிற்குச் செல்கிறார் என்றும், தன் பயணத்தின் வழியே, அந்நாட்டிற்கு நம்பிக்கை தர விழைகிறார் என்றும், Burke அவர்கள் எடுத்துரைத்தார்.

திருத்தந்தையின் இப்பயணத்தின் போது, கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை பர்த்தலமேயு, மற்றும் காப்டிக் ஆர்த்தடாக்ஸ் திருத்தந்தை 2ம் Tawadros அவர்களும் இணைந்து வருவது, கிறிஸ்தவ ஒன்றிப்பு குறித்த ஆவல், கிறிஸ்தவ உலகெங்கும் வளர்ந்துவருகிறது என்பதைக் காட்டுகின்றது என்று Burke அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதனன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தி, 'அமைதியின் எகிப்தில், அமைதியின் திருத்தந்தை' என்ற கருப்பொருளுடன் ஏற்பாடு செய்யபப்ட்டுள்ள எகிப்து பயணத்திற்கு ஒரு முகவுரைபோல அமைந்தது.

"அமைதி நிறைந்த உலகை கட்டியெழுப்ப, பல்வேறு மதப் பாரம்பரியங்களைக் கொண்டுள்ள மனிதர்களிடையே நட்பையும், மரியாதையையும் வளர்ப்போமாக" என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.