2017-04-26 17:00:00

'இரக்கத்தின் முகம்' ஆவணப்படம் வெளியீடு


ஏப்.26,2017. இறை இரக்கம் என்பது வெறும் பக்தி முயற்சி அல்ல; மாறாக, அது, இவ்வுலகில் இன்றும் வாழும் உண்மை என்றும், இவ்வுலகை மாற்றும் வலிமை பெற்றது என்றும் Knights of Columbus அமைப்பின் தலைவர், Carl Anderson அவர்கள், ஒரு திரைப்பட வெளியீட்டு நிகழ்வில் கூறினார் என்று CNA கத்தோலிக்கச் செய்தி கூறியுள்ளது.

'The Face of Mercy' அதாவது, 'இரக்கத்தின் முகம்' என்ற தலைப்பில், Knights of Columbus அமைப்பினர் உருவாக்கியுள்ள ஒரு மணிநேர ஆவணப்படம், அண்மையில் வெளியிடப்பட்ட வேளையில், Anderson அவர்கள் இவ்வாறு கூறினார்.

கிறிஸ்துவின் பாடுகளை மையப்படுத்தி, 2004ம் ஆண்டு வெளியான, 'The Passion of the Christ' என்ற புகழ்பெற்ற திரைப்படத்தில், இயேசுவின் பாத்திரமேற்று நடித்த, Jim Caviezel என்ற நடிகர், இந்த ஆவணப்படத்தின் தொகுப்புரையை, பின்னணியில் வழங்கியுள்ளார்.

இறை இரக்க பக்தியின் வரலாறு, இறையியல் இவற்றுடன், தனிப்பட்டவர்கள் வாழ்வில் இறை இரக்கம் ஆற்றிய நன்மைகள் குறித்த சாட்சியப் பகிர்வுகள் இத்திரைப்படத்தில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

ருவாண்டா நாட்டில் நிகழ்ந்த இனப் படுகொலைகளில் தன் குடும்பத்தினர் அனைவரையும் இழந்த Immaculée Ilibagiza என்ற பெண், தன் குடும்பத்தினரைக் கொலை செய்தவர்களை எவ்வாறு மன்னித்தார் என்பதும், நியூ யார்க் நகரில் நிகழ்ந்த ஒரு துப்பாக்கிச் சூட்டினால், தன் உடலில், இடுப்புக்குக் கீழ் செயலற்று, சக்கர நாற்காலியில் வாழும் காவல்துறை அதிகாரி ஒருவர், அந்நகரில் சமாதானத்தைக் கொணர எவ்வாறு முயற்சிகள் மேற்கொள்கிறார் என்பதும் இத்திரைப்படத்தில் விளக்கப்பட்டுள்ளன.

அதே வண்ணம், ஓர் இளம் கைம்பெண், தன் கணவரைக் கொன்றவர்களை எவ்விதம் மன்னித்துள்ளார் என்பதும், அமெரிக்க கால்பந்தாட்ட வீரர் ஒருவர், வீடற்றவர்களுக்கு பணியாற்றுவதும், இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளன.

ஆதாரம் : CNA / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.