2017-04-24 16:48:00

இத்தாலி, கிரீஸ் அரசுகளைப் பாராட்டியத் திருத்தந்தை


ஏப்.24,2017. 21ம் நூற்றாண்டு மறைசாட்சிகளைச் சிந்திக்கும் இவ்வேளையில், இன்றைய உலகில் கொடுமைகளில் சிக்கியுள்ள ஆயிரமாயிரம் மக்களை எண்ணிப் பார்ப்போம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சனிக்கிழமை மாலை, புனித பர்த்தலோமேயு பசிலிக்காவிலிருந்து புறப்படும் வேளையில் கூறினார்.

புனித பர்த்தலமேயு பசிலிக்காவைப் பராமரித்துவரும் சான் எதிஜியோ அமைப்பினரால் புகலிடம் பெற்றுள்ள புலம் பெயர்ந்தோரை, இச்சனிக்கிழமை மாலை சந்தித்தத் திருத்தந்தை, இத்தாலி, கிரீஸ் ஆகிய நாடுகள், புலம்பெயர்ந்தோருக்கு அளிக்கும் வரவேற்பு போற்றுதற்குரியது என்று கூறினார்.

குழந்தைகள் வேண்டாம் என்று கூறிவந்த ஐரோப்பிய கலாச்சாரம், இப்போது, புலம்பெயர்ந்தோரும் வேண்டாம் என்று தன் கதவுகளை மூடிக் கொண்டால், அது, இச்சமுதாயம் எடுக்கும் தற்கொலை முடிவாக அமையும் என்று திருத்தந்தை வருத்தத்துடன் குறிப்பிட்டார்.

'புதிய மறைசாட்சிகள்' நினைவிடமாகக் கருதப்படும் புனித பர்த்தலமேயு பசிலிக்காவில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மரத்தால் செய்யப்பட்டிருந்த ஒரு புறாவை, அடையாளப் பொருளாக அர்ச்சித்தார்.

சிரியா நாட்டின் அலெப்போ நகரில், இஸ்லாமியத் தீவிரவாத அமைப்பால் சிதைக்கப்பட்ட ஒரு கிறிஸ்தவ கோவிலிலிருந்து கொண்டவரப்பட்ட இந்த புறா உருவத்தை, புலம் பெயர்ந்தவர்களில் ஒருவர், ஆசிய, மத்திய கிழக்குப் பகுதிகளுக்கென ஒதுக்கப்பட்டிருந்த பீடத்தில் வணக்கப் பொருளாக வைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.