2017-04-22 16:40:00

வெனெசுவேலா அரசு, அதிகாரத்தை இழக்கும் ஆபத்தில் உள்ளது


ஏப்.22,2017. வெனெசுவேலா நாட்டில் அரசுக்கெதிரான போராட்டங்கள் பரவலாக இடம்பெற்றுவரும்வேளை, போராட்டம் நடத்துவது குடிமக்களின் உரிமை என்றும், அமைதியான முறையில் பொது மக்கள் நடத்திவரும் போராட்டத்தைக் குற்றமாக நோக்கக் கூடாது என்றும், அந்நாட்டு ஆயர்கள் வெளியிட்ட அறிக்கை கூறுகின்றது.

குடிமக்களின் சட்டமுறையான உரிமைகளை அரசு மதிக்கத் தவறும்போது, அது தனது சட்டப்படியான அதிகாரத்தை இழக்கின்றது என்று, தங்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள ஆயர்கள், எல்லா அதிகாரமும் ஒருவரின் அதிகாரத்தின்கீழ் இருப்பது உட்பட, மக்களாட்சி முறையைப் புறக்கணிக்கும் ஏனைய விவகாரங்களும் நாட்டில் இடம்பெறுகின்றன என எச்சரித்துள்ளனர்.

தென் அமெரிக்க நாடான வெனெசுவேலாவில், ஏப்ரல் 20, இவ்வியாழனன்று, ஏறக்குறைய அறுபது இலட்சம் பேர் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

இதற்கிடையே, அந்நாட்டில் meningitis நோய்க்குத் தேவையான மருந்து கிடைக்காததால், 35 வயது நிரம்பிய அருள்பணியாளர் ஒருவர் புனித சனிக்கிழமையன்று இறந்துள்ளார்.

மேலும், வெனெசுவேலா நாட்டு ஆயர்களின் இந்த அறிக்கைக்கு, பானமா நாட்டு ஆயர்கள் தங்கள் ஆதரவைத் தெரிவிக்கும் அறிக்கை ஒன்றை இவ்வெள்ளியன்று வெளியிட்டுள்ளனர். 

ஆதாரம் : Fides/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.