2017-04-22 16:34:00

பிலிப்பைன்ஸ் திருஅவைத் தலைவர்கள் சமூக ஊடக மறைசாட்சிகள்


ஏப்.22,2017. பிலிப்பைன்ஸ் நாட்டில், அரசியல் தொடர்புடைய விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவிக்கும் ஒவ்வொரு முறையும், அந்நாட்டின் கத்தோலிக்கத் தலைவர்கள், சமூக ஊடகத்தில் மறைசாட்சிகளாக ஆக்கப்படுகின்றனர் என, பிலிப்பைன்ஸ் ஆயர் பேரவைத் தலைவர் கவலை தெரிவித்தார்.

ஆயர்களாகிய நாங்கள், இணையதளங்களில் ஆயிரக்கணக்கில் கொச்சையாகப் பேசப்படுகின்றோம், ஆயிரம் முறைகள் கொல்லப்படுகின்றோம் என்று கூறியுள்ள,  பேராயர் சாக்ரடீஸ் வியேகாஸ் அவர்கள், இத்தகைய செயல்களில் ஈடுபடுவோர், விவாதங்களைத் தொடங்கி, வருத்தமடையச் செய்வதன் வழியாக, இணையதளங்களில் வெறுப்பை விதைக்கின்றனர் எனக் கூறியுள்ளார்.

மேலும், நற்பெயரைக் கெடுக்கும் செய்திகளையும் இவர்கள், இணையதளங்களில் வெளியிடுகின்றனர் எனவும், பேராயர் குறை கூறியுள்ளார்.

அருள்பணியாளர்களும், ஆயர்களும், சமூக விவகாரங்கள் குறித்து, அரசை விமர்சிக்கையில், இத்தகைய நபர்களால், அவர்கள் இணையத்தளத்தில் எப்போதும் எதிர்ப்பை எதிர்கொள்கின்றனர் என்றும், பிலிப்பைன்ஸ் ஆயர் பேரவைத் தலைவர் கூறினார்.

கத்தோலிக்கத் திருஅவை அடக்குமுறையை எதிர்கொள்கின்றது என்றும், வாழ்வு மற்றும் குடும்பம் பற்றிய கடவுளின் போதனைகள் தாக்குதலுக்கு உள்ளாகின்றன என்றும், பேராயர் வியேகாஸ் அவர்கள் கூறியுள்ளார்.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.