2017-04-22 16:07:00

அவிஞ்ஞோனில் ஏழாம் நூற்றாண்டு நினைவு நிகழ்வு


ஏப்.22,2017. “ஆண்டவரே, எம் வாழ்வுக்கு குணப்படுத்துதலை வழங்கியருளும். இதனால், நாங்கள், இவ்வுலகின் போக்குக்குப் பலியாகாமல், இவ்வுலகை எம்மால் பாதுகாக்கவும்,  இவ்வுலகில் மாசு கேட்டையும், அழிவையும் அல்ல, மாறாக, அழகை விதைக்கவும் எம்மால் இயலும்” என்று இச்சனிக்கிழமையன்று மன்றாடியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

@pontifex என்ற முகவரியில், ஏறக்குறைய ஒவ்வொரு நாளும், ஒன்பது மொழிகளில் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சனிக்கிழமையன்று வெளியிட்ட செய்தியில், இவ்வாறு ஆண்டவரிடம் செபித்துள்ளார்.

இன்னும், அவிஞ்ஞோனில் (Avignon), திருத்தந்தையர் வாழ்ந்ததன் ஏழாம் நூற்றாண்டு நினைவு நிகழ்வு, வருகிற ஜூன் 23ம் தேதி முதல், 25ம் தேதி வரை நடைபெறவுள்ளவேளை, அதில் கலந்துகொள்வதற்கு, தனது பிரதிநிதியாக, கர்தினால் Paul Poupard அவர்களை, இச்சனிக்கிழமையன்று நியமித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கர்தினால் Paul Poupard அவர்கள், திருப்பீட கலாச்சார அவையின் முன்னாள் தலைவராவார்

தென்கிழக்கு பிரான்சிலுள்ள அவிஞ்ஞோன், 1309ம் ஆண்டு முதல், 1377ம் ஆண்டு வரை, கத்தோலிக்கத் திருத்தந்தையரின் தலைமையகமாக இருந்து வந்துள்ளது. திருத்தந்தையர் 5ம் கிளமென்ட்(1305–1314); 22ம் ஜான்(1316–1334); 12ம் பெனடிக்ட்(1334–1342); 6ம் கிளமென்ட் (1342–1352); 6ம் இன்னோசென்ட்(1352–1362) ஆகியோர் அவிஞ்ஞோனில் இருந்துள்ளனர்.

இன்னும், 20 மற்றும் 21ம் நூற்றாண்டுகளில் கிறிஸ்துவுக்காக உயிர் துறந்த 'புதிய மறைசாட்சிகளின்' நினைவிடமாக அமைக்கப்பட்டுள்ள உரோம் நகர் புனித பர்த்தலமேயு பசிலிக்காவில், இச்சனிக்கிழமை மாலை ஐந்து மணியளவில், சான் எஜிதியோ பிறரன்பு அமைப்புடன் சேர்ந்து திருவழிபாட்டை நடத்துகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த பசிலிக்காவில், புதிய மறைசாட்சிகள் பலரின் நினைவுப் பொருள்கள், ஐரோப்பா, ஆப்ரிக்கா, ஆசியா, அமெரிக்கா, ஆகிய கண்டங்களைச் சார்ந்தோர், மற்றும் கம்யூனிச, நாத்சி அடக்குமுறைகளால் கொல்லப்பட்டோர் என்று பிரிக்கப்பட்டு, ஆறு பீடங்களில், வைக்கப்பட்டுள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.