2017-04-21 15:58:00

இறை இரக்கத்தின் திருத்தந்தையர் - 2ம் ஜான் பால், பிரான்சிஸ்


ஏப்.21,2017. திருத்தந்தை புனித 2ம் ஜான் பால் அவர்களும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், தங்கள் சொந்த நாடுகளில், இடர்கள் நிறைந்த சமுதாயச் சூழலில் வளர்ந்தவர்கள் என்பதால், அவர்கள் இருவரும் இறைவனின் இரக்கம் குறித்து வலியுறுத்தி வருவது வியப்பைத் தரவில்லை என்று போலந்து நாட்டு அருள்பணியாளர் ஒருவர், வத்திக்கான் வானொலியில் அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்களை, புனிதர் நிலைக்கு உயர்த்தும் வழிமுறைகளை ஒருங்கிணைத்த அருள்பணி Slawomir Oder அவர்கள், ஏப்ரல் 23ம் தேதி சிறப்பிக்கப்படும் இறை இரக்க ஞாயிறையொட்டி வழங்கிய இப்பேட்டியில், இவ்விரு திருத்தந்தையரும் மக்களின் துயர் கண்டு இளகும், மென்மையான உள்ளம் கொண்டவர்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை என்று எடுத்துரைத்தார்.

உயிர்ப்பின் வழியே, இறைவனின் இரக்கம், சக்தி மிகுந்த வகையில் வெளியாகிறது என்பதை உணர்த்தும் வகையில், இறை இரக்க ஞாயிறை, உயிர்ப்பு ஞாயிறுக்கு அடுத்த ஞாயிறாக, திருத்தந்தை புனித 2ம் ஜான் பால் அறிவித்தார் என்று, அருள்பணி Oder அவர்கள் விளக்கிக் கூறினார்.

இறைவனின் நீதியைவிட, அவரது இரக்கம் மென்மையான பண்பு என்பதை, Dives in Misericordia என்ற திருமடலில், திருத்தந்தை புனித 2ம் ஜான்பால் அவர்கள் கூறியுள்ளதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பலமுறை, தன் உரைகளிலும், மடல்களிலும் பயன்படுத்தியுள்ளார் என்பதையும், அருள்பணி Oder அவர்கள் தன் பேட்டியில் சுட்டிக்காட்டினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.