2017-04-21 15:33:00

20, 21ம் நூற்றாண்டுகளின் புதிய மறைசாட்சிகளின் நினைவிடம்


ஏப்.21,2017. 2000மாம் ஆண்டு சிறப்பிக்கப்பட்ட புனித ஆண்டை முன்னிட்டு, 20ம் நூற்றாண்டில் இறந்த மறைசாட்சிகளைப் பற்றிய விவரங்களைத் திரட்டும் பணியை, திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள், 1999ம் ஆண்டு, Sant'Egidio குழுமத்தின் நிறுவனரான Andrea Riccardi அவர்களிடம் ஒப்படைத்தார்.

திருத்தந்தையின் பணியை ஏற்றுக்கொண்ட Sant'Egidio குழுமத்தினர், புனித பர்த்தலமேயு பசிலிக்காவை மையமாகக் கொண்டு, இரண்டு ஆண்டுகள் ஆற்றிய பணியின் முடிவில், 20ம் நூற்றாண்டில் இறந்த கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ மறைசாட்சிகள் குறித்த 12,000 சாட்சிய தகவல்கள் மற்றும் நினைவுப் பொருள்களைத் திரட்டி வைத்தனர்.

2002ம் ஆண்டு, அக்டோபர் மாதம், திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள், ஏனைய கிறிஸ்தவ, ஆர்த்தடாக்ஸ் சபைகளின் தலைவர்கள் சிலரோடு இணைந்து, புனித பர்த்தலமேயு பசிலிக்காவில் வழிபாட்டு நிகழ்வை தலைமையேற்று நடத்தி, அந்த பசிலிக்காவை, புதிய மறைசாட்சிகளின் நினைவிடமாக உருவாக்கினார்.

இந்த பசிலிக்காவில், புதிய மறைசாட்சிகள் பலரின் நினைவுப் பொருள்கள், ஐரோப்பா, ஆப்ரிக்கா, ஆசியா, அமெரிக்கா, ஆகிய கண்டங்களைச் சார்ந்தோர், மற்றும் கம்யூனிச, நாத்சி அடக்குமுறைகளால் கொல்லப்பட்டோர் என்று பிரிக்கப்பட்டு, ஆறு பீடங்களில், வைக்கப்பட்டுள்ளன.

எல் சால்வதோர் நாட்டில் திருப்பலி நிறைவேற்றிக்கொண்டிருந்த வேளையில் கொல்லப்பட்ட பேராயர், அருளாளர் ஆஸ்கர் ரொமேரோ பயன்படுத்திய திருப்பலி நூல், பாகிஸ்தானில் கொல்லப்பட்ட அமைச்சர், பால் பாட்டி அவர்கள் பயன்படுத்திய விவிலியம், கம்யூனிச அடக்குமுறையின்போது, அல்பேனியா நாட்டின் கத்தோலிக்கர்கள், திரு நற்கருணையை எடுத்துச் செல்ல பயன்படுத்திய சிறு பேழை ஆகியவை, புனித பர்த்தலமேயு பசிலிக்காவில் பாதுக்காப்பட்டு வருகின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.