2017-04-19 17:11:00

பாத்திமா அன்னை நூற்றாண்டு விழா கிரிக்கெட் விளையாட்டு


ஏப்.19,2017. பாத்திமா அன்னை மரியாவின் நூற்றாண்டு விழாவையொட்டி, போர்த்துக்கல் நாட்டில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கிரிக்கெட் விளையாட்டுக்களில் கலந்துகொள்ள, புனித பேதுரு கிரிக்கெட் கழகத்தின் வீரர்கள், ஏப்ரல் 19, இப்புதனன்று போர்த்துக்கல் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டனர்.

போர்த்துக்கல், இஸ்பெயின், பிரித்தானியா நாடுகளிலிருந்து, இவ்விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் குழுவினரில், கத்தோலிக்கர், மற்றும் கிறிஸ்தவர்களுடன், இஸ்லாமியர், இந்துக்கள், யூதர்கள் என்று பல சமயங்களை சேர்ந்தவர்களும் பங்கேற்கின்றனர் என்று வத்திக்கான் செய்தித் துறை அறிவித்துள்ளது.

திருப்பீட கலாச்சார அவையின் முயற்சியால் உருவான புனித பேதுரு கிரிக்கெட் கழகம், போர்த்துக்கல் நாட்டில் மேற்கொண்டுள்ள நான்கு நாள் பயணத்தின் முதல் நாளை, பாத்திமா அன்னை திருத்தலத்தில் செலவிடுகிறது.

இந்தியா, இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து, உரோம் நகரில் பயின்று வரும் குரு மாணவர்கள், மற்றும் இளம் அருள்பணியாளர்களைக் கொண்டு, 2013ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்தக் கிரிக்கெட் கழகம், 2014, 2016 ஆகிய ஆண்டுகளில், இங்கிலாந்து நாட்டில், ஆங்கிலிக்கன், கிறிஸ்தவர், இஸ்லாமியர் இணைந்த குழுக்களுடன் போட்டிகளை மேற்கொண்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.