2017-04-19 15:51:00

சாம்பலில் பூத்த சரித்திரம் : திருத்தூதர்கள் காலம் பாகம் 13


ஏப்.19,2017. இயேசு தம்மைப் பின்பற்றுமாறு அழைத்த முதல் சீடர்கள் திருத்தூதர் பேதுருவும்,  அவர் சகோதரர் அந்திரேயாவுமாகத்தான் இருக்க வேண்டும். மாற்கு நற்செய்தி பிரிவு ஒன்று, திருச்சொற்கள் 16 முதல், 18 வரையுள்ள பகுதியில் இவ்வாறு வாசிக்கிறோம். இயேசு கலிலேயக் கடலோரமாய்ச் சென்றபோது சீமோனையும் அவர் சகோதரரான அந்திரேயாவையும் கண்டார். மீனவர்களான அவர்கள் கடலில் வலை வீசிக்கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களைப் பார்த்து, “என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்” என்றார். உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள். பின்னர், சற்று அப்பால் சென்றபோது செபதேயுவின் மகன் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் இயேசு கண்டார். அவர்கள் படகில் வலைகளைப் பழுது பார்த்துக் கொண்டிருந்தார்கள். உடனே இயேசு அவர்களையும் அழைத்தார். அவர்களும் தங்கள் தந்தை செபதேயுவைக் கூலியாள்களோடு படகில் விட்டுவிட்டு அவர் பின் சென்றார்கள்.

முதல் நூற்றாண்டில் வாழ்ந்த மீனவர்கள், முரட்டுத்தனமுள்ளவர்களாக, தலைமுடியை ஒழுங்காக வாராமல், ஆடைகளை அழுக்கின்றி அணியாமல், பலநேரங்களில் பண்பாடற்ற மொழிகளிலே பேசுவார்கள். அவர்கள் உறுதியான உடல்கட்டமைப்புடன், கிளர்ச்சிக் குணம் உள்ளவர்களாக இருந்தனர். இதனாலே, சகோதரர்களான திருத்தூதர்கள் யாக்கோபும் யோவானும் இடியின் மகன்கள் எனச் சொல்லப்பட்டிருக்கலாம். மீன்பிடித் தொழில், உடலளவில் சவால் நிறைந்தது என்பதால், அவர்கள் வாழ்வும் முரட்டுத்தனமாக, கடினமானதாக இருந்தது. கலிலேயா கடலில் அடிக்கடி புயல் காற்று கடுமையாய் வீசுவதால், அக்கடலில் மீன்பிடித்துப் பழகிய அந்த மீனவர்கள், அச்சமின்றி இருந்தனர். மீனவரான பேதுரு, எப்போதும் முந்திக்கொண்டு பேசியவர். ஆனால், இயேசு அவரைப் பார்த்து, என் பின்னே வாருங்கள் என்று அழைத்தவுடன், எந்த மறுசிந்தனைக்கும் இடமளிக்காது, அந்த இடத்திலே படகுகள், வலைகள், அதற்குரிய ஏனையப் பொருள்கள் என, எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்சென்றார். இவ்வாறு இயேசு நம்மை அழைக்கும்போது, நம்மில் எத்தனை பேர் நாம் செய்துவரும் தொழிலை உடனடியாக விட்டுவிட்டு, அவரைப் பின்பற்றுவோம்

நல்லதோ கெட்டதோ எல்லாவற்றுக்கும் மற்ற சீடர்களின் பேச்சாளராக, இயேசுவிடம் செயல்பட்டவர் திருத்தூதர் பேதுரு. இயேசுவை, உயிருள்ள கடவுளின் மகன், மெசியா என முதன் முதலில் கூறியவர் இவர். இயேசு பேதுருவை அழைத்தது பற்றி லூக்கா நற்செய்தியில் (5,6-8) இவ்வாறு வாசிக்கிறோம். ஒரு நாள் இயேசு கெனசரேத்து ஏரிக்கரையில் நின்றுகொண்டிருந்தார். திரளான மக்கள் இறைவார்த்தையைக் கேட்பதற்கு அவரை நெருக்கிக் கொண்டிருந்தனர். அப்போது ஏரிக்கரையில் இரண்டு படகுகள் நிற்கக் கண்டார். மீனவர் படகைவிட்டு இறங்கி, வலைகளை அலசிக் கொண்டிருந்தனர். அப்படகுகளுள் ஒன்று சீமோனுடையது. அதில் இயேசு ஏறினார். அவர் கரையிலிருந்து அதைச் சற்றே தள்ளும்படி அவரிடம் கேட்டுக் கொண்டு படகில் அமர்ந்தவாறே மக்கள் கூட்டத்துக்குக் கற்பித்தார். அவர் பேசி முடித்தபின்பு சீமோனை நோக்கி, “ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டு போய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்” என்றார். சீமோன் மறுமொழியாக, “ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை; ஆயினும் உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன்” என்றார். அப்படியே அவர்கள் செய்து பெருந்திரளான மீன்களைப் பிடித்தார்கள். வலைகள் கிழியத் தொடங்கவே, மற்றப் படகிலிருந்த தங்கள் கூட்டாளிகளுக்குச் சைகைகாட்டித் துணைக்கு வருமாறு அழைத்தார்கள். அவர்களும் வந்து இரு படகுகளையும் மீன்களால் நிரப்பினார்கள். அவை மூழ்கும் நிலையிலிருந்தன. இதைக் கண்ட சீமோன் பேதுரு, இயேசுவின் கால்களில் விழுந்து, “ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும்” என்றார். ஆயினும், இயேசு சீமோனை நோக்கி, “அஞ்சாதே; இது முதல் நீ மனிதரைப் பிடிப்பவன் ஆவாய்” என்று சொன்னார்.

திருத்தூதர் பேதுரு, இயேசுவோடு மூன்றாண்டுகள் வாழ்ந்து, இயேசு ஆற்றிய அற்புதங்கள், அவரின் போதனைகள், இயேசு செய்த செபம் என அனைத்தையும் பார்த்தவர், கேட்டவர். இயேசு தபோர் மலையில் தோற்றம் மாறியபோது அக்காட்சியைக் கண்டவர்களில் ஒருவர் பேதுரு. இயேசுவின்  முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது. அவருடைய ஆடைகள் ஒளிபோன்று வெண்மையாயின. மோசேயும் எலியாவும் அவர்களுக்கு முன் தோன்றி இயேசுவோடு உரையாடிக்கொண்டிருந்தனர். அப்போது, பேதுரு இயேசுவைப் பார்த்து, “ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைக்கட்டுமா? இது உமக்கு விருப்பமா?” என்றார் (மாற் 9:2-13; லூக்.9:28-36). இயேசுவின் மகிமையைக் கண்ட பேதுருவே, பகைவரிடம் இயேசுவை அறியேன் என மறுதலித்தவர். பேதுரு தம்மை மறுதலிப்பார் என இயேசு முன்னரே அவரிடம் கூறியிருந்தார். இதனை மாற்கு நற்செய்தி பிரிவு 14ல் வாசிக்கிறோம்.

இயேசு தம் சீடர்களிடம், “நீங்கள் அனைவரும் ஓடிப்போவீர்கள். ஏனெனில், ‘ஆயரை வெட்டுவேன்; அப்போது ஆடுகள் சிதறடிக்கப்படும்’ என்று மறைநூலில் எழுதியுள்ளது. ஆனால் நான் உயிருடன் எழுப்பப்பட்ட பின்பு உங்களுக்கு முன்பே கலிலேயாவுக்குப் போவேன்”என்றார். பேதுரு அவரிடம், “எல்லாரும் ஓடிப்போய்விட்டாலும் நான் அவ்வாறு செய்யமாட்டேன்”என்றார். இயேசு அவரிடம், “இன்றிரவில் சேவல் இருமுறை கூவுமுன் மும்முறை நீ என்னை மறுதலிப்பாய் என உனக்குச் சொல்கிறேன்” என்றார். அவரோ, “நான் உம்மோடு சேர்ந்து இறக்க வேண்டியிருந்தாலும் உம்மை ஒருபோதும் மறுதலிக்க மாட்டேன்” என்று மிக அழுத்தமாகச் சொன்னார். அப்படியே இயேசுவின் சீடர்கள் அனைவரும் சொன்னார்கள். இயேசுவிடம் தாங்கள் உறுதி கூறியபடி நடந்தார்களா சீடர்கள்? அதுதான் இல்லை.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.