2017-04-18 14:56:00

வெறுப்பைத் தூண்டும் கூறுகள் பாட நூல்களிலிருந்து அகற்றப்பட..


ஏப்.18,2017. பாகிஸ்தானில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர், தெய்வநிந்தனை குற்றம் சாட்டப்பட்டு, கொடூரமாய்க் கொல்லப்பட்டிருப்பது குறித்து, தனது வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது அந்நாட்டு கத்தோலிக்கத் திருஅவை.

Mardan நகரிலுள்ள Abdul Wali Khan பல்கலைக்கழகத்தில் பத்திரிகையியல் படித்துக்கொண்டிருந்த Mashal Khan என்ற மாணவர் மீது தெய்வநிந்தனை குற்றம் சுமத்தப்பட்டு, ஏப்ரல் 13, கடந்த வியாழனன்று கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக, கைது செய்யப்பட்டுள்ள 22 பேரில், 16 பேர், அப்பல்கலைக்கழக மாணவர்கள், மற்றும், ஆறு பேர், அங்குப் பணியாற்றிய ஊழியர்கள்.

மாணவர் Khan அவர்களை, அவர் தங்கியிருந்த விடுதி அறையிலிருந்து வெளியே இழுத்து வந்து, அடித்து, ஆடைகளைக் கிழித்து, இரண்டாவது மாடியிலிருந்து கீழே தள்ளி, சுட்டு, கொலை செய்துள்ளனர்.  

இவ்வன்முறைக்கு எதிராக கண்டனம் தெரிவித்துள்ள, பாகிஸ்தான் ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதி பணிக்குழு (NCJP), குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அரசை வலியுறுத்தியுள்ளது.  

இப்பணிக்குழுவின் தலைவராகிய Faisalabad ஆயர், Joseph Arshad அவர்கள் உட்பட, முக்கிய கத்தோலிக்க அதிகாரிகள் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், காழ்ப்புணர்வு மற்றும், பாகுபாட்டு உணர்வைத் தூண்டக்கூடிய கூறுகள், பாகிஸ்தானின் கல்வித் திட்டத்தில் இடம்பெற்றுள்ளதே, இக்கொலைக்குக் காரணம் எனக் குறை கூறியுள்ளனர். 

நாட்டில் அமைதியையும் சகிப்புத் தன்மையையும் நிலைநிறுத்த விரும்பினால்,  வெறுப்புணர்வுகளைத் தூண்டும் இத்தகையக் கூறுகள், அனைத்துப் பள்ளிகளின் பாட நூல்களிலிருந்து அகற்றப்பட வேண்டுமென, கத்தோலிக்க அதிகாரிகள், அரசை வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், நீதி, சட்டம், ஒழுங்கு ஆகியவை, இளையோருக்குக் கற்றுக்கொடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் அத்தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆதாரம் : UCAN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.