2017-04-18 14:40:00

மியான்மாரில் நம்பிக்கையை ஏற்படுத்த சமயத் தலைவர்களுக்கு...


ஏப்.18,2017. பிளவுபட்டுள்ள மியான்மார் நாட்டிற்கு, கிறிஸ்துவின் உயிர்ப்பின் நம்பிக்கையைக் கொண்டுவருமாறு, அந்நாட்டின் அனைத்து சமயத் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார், அந்நாட்டு கத்தோலிக்கத் திருஅவைத் தலைவர்.

யாங்கூன் பேராயராகிய கர்தினால் சார்லஸ் மாங் போ அவர்கள் வெளியிட்ட, கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழாச் செய்தியில், நாட்டில் ஒற்றுமையைக் கொண்டு வருவதற்கு, சமயத் தலைவர்கள் எல்லாரும் ஒன்றிணைந்து செயல்படுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

மியான்மாரின் 16 மறைமாவட்டங்களில், 700க்கும் அதிகமான அருள்பணியாளர்களும், இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட அருள்சகோதரிகளும் பணியாற்றுகின்றனர், இவர்கள் அனைவரோடும் தானும் இணைந்து, நாட்டிலுள்ள ஏறக்குறைய ஐந்து இலட்சம் புத்தமத ஆண் துறவிகள் மற்றும், எழுபதாயிரம் பெண் துறவிகளிடம் இவ்விண்ணப்பத்தை முன்வைப்பதாக, தனது நீண்ட செய்தியில் கூறியுள்ளார், கர்தினால் போ.

பிரிந்த கிறிஸ்தவ சபைகளிலும், நூற்றுக்கணக்கான போதகர்கள் உள்ளனர், அதேபோல், பிற மதங்களும் தங்களின் தலைவர்களைக் கொண்டிருக்கின்றன, எனவே, நாட்டின் சமயத் தலைவர்கள் எல்லாரும் ஒன்றிணைந்து, சோர்வடைந்துள்ள மக்களின் வாழ்வில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார், கர்தினால் போ.

மியான்மாரில், புத்தமத ஆண் துறவிகளின் எண்ணிக்கை, அந்நாட்டு இராணுவத்தினரின் எண்ணிக்கைக்கு, ஏறக்குறைய சமமாக உள்ளது எனவும், கர்தினால் தனது செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆதாரம் : UCAN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.