2017-04-17 15:46:00

கர்தினால் வின்சென்ட் நிக்கோல்ஸ் - உயிர்ப்புவிழா மறையுரை


ஏப்.,17,2017. திருஅவை வழிபாட்டில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நெருப்பு ஓர் அடையாளமாக பயன்படுத்தப்படுகிறது என்றும், வாழ்வை மாற்றக்கூடிய புதுமையும், ஒளி மிக்கத் தன்மையும், நெருப்பு, நமக்குச் சொல்லித் தரும் பாடங்கள் என்றும், இங்கிலாந்து கர்தினால், வின்சென்ட் நிக்கோல்ஸ் அவர்கள் உயிர்ப்புவிழா மறையுரையில் கூறினார்.

ஏப்ரல் 15, இச்சனிக்கிழமை இரவு, வெஸ்ட்மின்ஸ்டர் பேராலயத்தில் உயிர்ப்பு திருவிழிப்பு வழிபாட்டை தலைமையேற்று நடத்திய கர்தினால் நிக்கோல்ஸ் அவர்கள், நெருப்பின் வழியே மோசேயை முதன்முதல் சந்தித்த இறைவனைக் குறித்து, தன் மறையுரையில் பேசினார்.

எரியும் புதரிலிருந்து பேசிய இறைவன், அடிமைத்தனத்தில் சிக்கியிருந்த இஸ்ரயேல் மக்களை விடுவிக்க மோசேயிடம் கேட்டபோது, அது முற்றிலும் இயலாத ஒரு பணியாக மோசேக்குத் தெரிந்தது என்று கூறிய கர்தினால் நிக்கோல்ஸ் அவர்கள், இன்று இவ்வுலகில் அமைதியைக் கொணரவும், அடிமைத்தனத்தை ஒழிக்கவும் நமக்கு இறைவன் வழங்கும் அழைப்பு, இயலாத ஒரு காரியமாகத் தோன்றுகிறது என்று குறிப்பிட்டார்.

இருள் சூழ்ந்த இவ்வுலகைக் கண்டு அச்சம் எழுந்தாலும், அவ்விருளை ஒரு சிறு சுடர் கொண்டு விரட்ட முடியும் என்பதை இந்த இரவு நமக்குச் சொல்லித் தருகிறது என்று கூறிய கர்தினால் நிக்கோல்ஸ் அவர்கள், 'நான் உன்னோடு இருக்கிறேன், உன்னால் முடியும்' என்று இவ்வொளியின் வழியே உயிர்த்த இயேசு நம் ஒவ்வொருவரிடமும் சொல்கிறார் என்று, தன் மறையுரையில் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : ICN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.