2017-04-17 15:57:00

எகிப்தில் அமைதியாகக் கொண்டாடப்பட்ட உயிர்ப்புத் திருவிழா


ஏப்.,17,2017. ஏப்ரல் 9, குருத்து ஞாயிறன்று, எகிப்து நாட்டில், காப்டிக் ஆர்த்தடாக்ஸ் கோவில்கள் இரண்டில், ஏற்பட்ட வெடிகுண்டு தாக்குதல்களில் இறந்தோர் நினைவாக, அந்நாட்டில், உயிர்ப்புத் திருவிழா மிக அமைதியாகக் கொண்டாடப்பட்டதென்று பீதேஸ் செய்தி கூறியுள்ளது. 

எகிப்து நாட்டின் Tanta, Alexandria என்ற இரு நகரங்களில் உள்ள இரு காப்டிக் ஆர்த்தடாக்ஸ் ஆலயங்களில், தற்கொலை குண்டுதாரிகள் இருவர், தங்களையே வெடித்துக்கொண்டதால், வழிபாட்டில் கலந்து கொண்டவர்களில் 40க்கும் மேலானோர் கொல்லப்பட்டதையடுத்து, காப்டிக் சபையினர் உயிர்ப்பு விழா கொண்டாட்டங்களை மேற்கொள்ளவில்லை.

முக்கியமான கிறிஸ்தவ திருநாள்களின்போது, காப்டிக் ஆர்த்தடாக்ஸ் திருத்தந்தை, ஏனைய ஆயர்கள், அருள்பணியாளர்கள், அரசு அதிகாரிகளுடன் விழா வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொள்ளும் நிகழ்வுகள் இவ்வாண்டு நடைபெறவில்லை என்று பீதேஸ் செய்தி கூறியுள்ளது.

ஏப்ரல் 9 நிகழ்ந்த குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, அந்நாட்டு அரசுத்தலைவர் மூன்று மாத நெருக்கடி நிலையை அறிவித்துள்ளார் எனினும், ஏப்ரல் 28, 29 ஆகிய இரு நாள்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எகிப்து நாட்டில் தன் திருத்தூதுப் பயணத்தை மேற்கொள்வார் என்று வத்திக்கான் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.