2017-04-17 15:52:00

அருள்பணி Jacques Hamelஐ அருளாளராக உயர்த்தும் பணிகள் துவக்கம்


ஏப்.,17,2017. இஸ்லாமிய தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களால் 2016ம் ஆண்டு ஜூலை 26ம் தேதி கொல்லப்பட்ட அருள்பணி Jacques Hamel அவர்களை, அருளாளராக உயர்த்த தேவையான ஆய்வுப்பணிகள் துவக்கப்பட்டுள்ளன என்று, பிரெஞ்சு நாட்டுப் பேராயர் ஒருவர் கூறியுள்ளார்.

பிரெஞ்சு நாட்டின் Rouen உயர் மறைமாவட்டத்தின் பேராயர், Dominique Lebrun அவர்கள், ஏப்ரல் 13, புனித வியாழனன்று காலை, Notre Dame பேராலயத்தில், புனித எண்ணெய் அர்ச்சிக்கும் திருப்பலியை நிறைவேற்றிய வேளையில், கூடியிருந்த அருள்பணியாளர்கள், தியாக்கோன்கள் மற்றும் மக்களிடம் இந்த அறிக்கையை வெளியிட்டார்.

2016ம் ஆண்டு ஜூலை 26ம் தேதி, 85 வயது நிறைந்த அருள்பணியாளர் Jacques Hamel அவர்கள், Saint-Étienne-du-Rouvray என்ற கோவிலில் திருப்பலி நிறைவேற்றிக் கொண்டிருந்த வேளையில், இஸ்லாமிய தீவிரவாதக் குழுவைச் சேர்ந்த இரு இளையோரால் கழுத்து அறுபட்டு கொல்லப்பட்டார்.

ஒருவரது மரணத்திற்குப் பிறகு ஐந்தாண்டுகள் காத்திருந்து பின்னரே அவரது புனிதர்பட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்ற விதிமுறையிலிருந்து விலகி, அருள்பணி Jacques Hamel அவர்களை புனிதராக உயர்த்தும் வழிமுறைகளை மேற்கொள்ள, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2016ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அனுமதி வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : La-Croix / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.