2017-04-16 15:27:00

திருத்தந்தை - நம்பிக்கை செய்தியுடன் நகருக்குள் செல்வோம்


ஏப்.,16,2017. ஏப்ரல் 15, சனிக்கிழமை இரவு, உரோம் நேரம் 8.30 மணியளவில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புனித பேதுரு பசிலிக்காவில், உயிர்ப்பு திருவிழிப்பு திருப்பலியை தலைமையேற்று நடத்தினார். இத்திருப்பலியில், திருத்தந்தை வழங்கிய மறையுரை:

அன்பு சகோதர, சகோதரிகளே, "ஓய்வுநாளுக்குப்பின் வாரத்தின் முதல் நாள் விடியற்காலையில் மகதலா மரியாவும் வேறொரு மரியாவும் கல்லறையைப் பார்க்கச் சென்றார்கள்." (மத். 28:1) கல்லறைக்குச் சென்ற பெண்களை கற்பனை செய்து பார்க்கலாம். தங்கள் கண்களுக்கு முன்னே நடந்த கொடுமைகளை நம்பமுடியாமல், கண்ணீர் நிறைந்த கண்களுடன், சோர்வுடன் நடந்தனர், அப்பெண்கள். அன்பு, உண்மையிலேயே இறக்க முடியுமா என்பது அவர்களிடமிருந்த கேள்வி. சீடர்களைப்போல் ஓடிப்போய்விடாமல், அநீதியின் அத்தனை கொடூரங்களையும் பார்த்தவாறு, சிலுவையடியில் நின்ற அப்பெண்கள், இப்போது, கல்லறைக்கு முன் நின்றனர்.

இந்தக் காட்சியைக் கற்பனை செய்து பார்க்கக்கூடிய நமக்கு, அப்பெண்களின் முகங்களில், இன்று, அநீதமாக, கொடூரமாகக் கொலையுண்டவர்களின் அன்னையரையும், பாட்டிகளையும் பார்க்கமுடியும். வறுமை, மனித வர்த்தகம் என்ற கொடுமைகளுக்கு உள்ளாகும் பலரது முகங்களைக் காணமுடியும். சொந்த நாட்டையும், வீட்டையும் இழந்து, பிறநாடுகளில் தஞ்சம் புகுந்ததால் வெறுப்புடன் பார்க்கப்படும் பல குடியேற்றதாரரின் முகங்களைக் காணமுடியும். சிலரது சுயநலத்தால், தங்கள் வாழ்வின் அனைத்து நம்பிக்கைகளையும் இழந்து, ஒவ்வொரு நாளும் சிலுவையில் அறையப்படும் பலரது முகங்களைக் காணமுடியும். இக்கொடூரங்களைக் கண்டபின்னரும், மாற்றங்களைக் கொணராமல், செயலற்று நிற்கும் அரசுகளால், மனித மாண்பை இழந்துள்ள பலரது முகங்களைக் காணமுடியும்.

கல்லறை முன் நின்ற பெண்களின் முகங்களில் நம் முகங்களையும் காணமுடியும். காயப்பட்டிருக்கும் நாம், மாற்றங்கள் வராது என்ற விரக்தியுடன், கல்லறைகளில் வாழ்வதற்குப் பழகிக்கொள்ளலாம். அதைவிடப் பரிதாபம் என்னவெனில், வாழ்க்கை இப்படித்தான் இருக்கும் என்ற நிலைப்பாட்டையும் எடுத்திருக்கலாம். இவ்வாறு வாழப் பழகிக்கொள்ளும் நமக்கு, நம் தலைவர் மட்டும் இறப்பதில்லை; அவருடன், நம் நம்பிக்கையும் இறந்துபோகிறது.

"திடீரென ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது." (மத். 28:2) அப்பெண்கள் சற்றும் எதிர்பாராதவண்ணம் பூமி அதிர்ந்தது; "அஞ்சாதீர்கள்; அவர் உயிருடன் எழுப்பப்பட்டார்" என்ற செய்தி கிடைத்தது. சிலுவையில் அழிக்கப்பட்ட வாழ்வு, மீண்டும் விழித்தெழுந்தது.

தன் உயிர்ப்பின் வழியே, கிறிஸ்து, கல்லறையை மூடியிருந்த கல்லை மட்டும் அகற்றவில்லை; நம்பிக்கையின்மையால் நாம் எழுப்பிய சுவர்கள், மக்களிடமிருந்து விலகியிருக்கும் நோக்கத்தில் எழுப்பப்பட்டுள்ள கோட்டைகள் அனைத்தையும் உடைத்தெறிந்தார்.

இந்த இரவு நமக்குச் சொல்லித்தருவது இதுதான்: கிறிஸ்து உயிர் வாழ்கிறார்! இச்செய்தியே, மகதலா மரியாவையும், வேறொரு மரியாவையும் சீடர்களிடம் விரைந்து செல்லத் தூண்டியது (மத். 28:8). சீடர்களைச் சந்திக்க, அவர்கள், நகருக்குள் திரும்பிச் சென்றனர்.

அவ்விரு பெண்களைப்போலவே, நாமும் கல்லறையைப் பார்த்துவிட்டோம். இப்போது, நகருக்குள் செல்ல உங்களை நான் கேட்டுக்கொள்கிறேன். எங்கெல்லாம் கல்லறையும், சாவும் உறுதியாக நிலைபெற்றுள்ளதோ, அங்கெல்லாம், ஆண்டவர் உயிர் வாழ்கிறார் என்ற செய்தியைப் பறைசாற்றச் செல்வோம். தங்கள் நம்பிக்கை, கனவு, மாண்பு அனைத்தையும் புதைத்துவிட்ட மனிதர்களில், கிறிஸ்து மீண்டும் உயிர்த்தெழ விழைகிறார்.

இந்த நம்பிக்கை வழியில் நம்மை அழைத்துச் செல்லும் தூய ஆவியாருக்கு, நாம் அனுமதி தர மறுத்தால், நாம் கிறிஸ்தவர்கள் அல்ல. இந்தப் புதிய உதயத்தால், வியப்புற்று மகிழ்வதற்கு நம்மையே கையளிப்போம். அவரது அன்பும், கனிவும் நம்மை வழிநடத்த அனுமதிப்போம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.