2017-04-12 14:34:00

சாம்பலில் பூத்த சரித்திரம் : திருத்தூதர்கள் காலம் பாகம் 12


ஏப்.12,2017. திருத்தூதர் பேதுரு, இயேசுவின் பன்னிரு திருத்தூதர்களின் இளவரசர். திருஅவையைக் கட்டியெழுப்பும் பொறுப்பை திருத்தூதர் பேதுருவிடம் இயேசு ஒப்படைத்தார். அன்று இயேசு, பிலிப்புச் செசரியா பகுதியில் இருந்தபோது, தம் சீடரை நோக்கி, ``மானிடமகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?'' என்று கேட்டார். அதற்கு அவர்கள், ``சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் எரேமியா அல்லது பிற இறைவாக்கினருள் ஒருவர் என்றும் சொல்கின்றனர்'' என்றார்கள். ``ஆனால் நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?'' என்று அவர் கேட்டார். சீமோன் பேதுரு மறுமொழியாக, ``நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்'' என்று உரைத்தார். அதற்கு இயேசு, ``யோனாவின் மகனான சீமோனே, நீ பேறுபெற்றவன். ஏனெனில் எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை; மாறாக விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார். எனவே நான் உனக்குக் கூறுகிறேன்: உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின் மேல் என் திருஅவையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றிகொள்ளா. விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடை செய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்'' என்றார் (மத்.16:13-19). பாறை என்பதன் கிரக்கச் சொல் பேதுரு ஆகும். பேதுருவும், இயேசு விண்ணேற்பு அடைந்த பின்னர், திருத்தூதர்களுக்குத் தலைமையேற்று, திருஅவையை வழிநடத்தினார். இவ்வாறு, இவர், திருஅவையின் முதல் திருத்தந்தையானார்.

இயேசு இவ்வுலகில் இறையாட்சிப் பணியாற்றிய காலத்தில், அவரின் பன்னிரு திருத்தூதர்களில், மிகவும் வெளிப்படையாக, மிகவும் துணிச்சலாக, மனம்திறந்து பேசிய திருத்தூதர் பேதுருவாகத்தான் இருக்க வேண்டும். ஒருமுறை இயேசு, எருசலேமுக்குப் போய், மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால், பலவாறு துன்பப்படவும், கொலை செய்யப்படவும், மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும் என்பதைத் தம் சீடருக்கு எடுத்துரைக்கத் தொடங்கினார். உடனடியாக பேதுரு, பேதுரு இயேசுவைத் தனியே அழைத்துக் கடிந்துகொண்டு, “ஆண்டவரே, இது வேண்டாம். இப்படி உமக்கு நடக்கவே கூடாது” என்றார். ஆனால் இயேசு பேதுருவைத் திரும்பிப் பார்த்து, “என் கண்முன் நில்லாதே சாத்தானே, நீ எனக்குத் தடையாய் இருக்கிறாய்; ஏனெனில் நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய்(மத்.16:21-23) என்றார். இவ்வாறு கள்ளம் கபடற்ற முறையில், வெளிப்படையாகப் பேசுபவர் திருத்தூதர் பேதுரு. இவர், இயேசு கிறிஸ்துவின் மீது கொண்டிருந்த பற்றுறுதிக்கு, மிக மிகத் துணிச்சலான சான்றாக விளங்கியவர்களில் ஒருவர். இவரது தொடக்ககால வாழ்வு மிகவும் எளிமையானது, ஆடம்பரமற்றது. ஏறக்குறைய கி.மு. முதலாண்டில் பிறந்த இவர், ஏறக்குறைய கி.பி.67ம் ஆண்டில் உரோம் நகரில், சிலுவையில் தலைகீழாக அறையப்பட்டு உயிர் நீத்தார்.

திருத்தூதர் பேதுருவின் இயற்பெயர் சீமோன். இவர், பெத்சாய்தா என்னும் ஊரைச் சேர்ந்தவர் (யோவா.1:43,12:21). இவரும், இவரது சகோதரர் அந்திரேயாவும், இவர்களின் தந்தை யோனாவுடன் சேர்ந்து கலிலேயக் கடலில் மீன்பிடித்து வாழ்க்கை நடத்தியவர்கள். திருத்தூதர் பிலிப்புவும் இவ்வூரையே சேர்ந்தவர். திருத்தூதர்கள் பேதுருவும், அந்திரேயாவும், இயேசுவைப் பின்பற்றுவதற்கு முன், திருமுழுக்கு யோவானின் சீடர்களாக இருந்தவர்கள். யோவான் நற்செய்தி முதல் பிரிவில், இயேசு தம் முதல் சீடர்களை அழைத்த நிகழ்வில் இவ்வாறு வாசிக்கிறோம். திருமுழுக்கு யோவான் தம் சீடர் இருவருடன் அங்கு நின்று கொண்டிருந்தார். இயேசு அப்போது அப்பக்கம் நடந்து சென்று கொண்டிருந்தார். திருமுழுக்கு யோவான் அவரைக் கூர்ந்து பார்த்து, “இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி, ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர். எனக்குப்பின் வரும் இவர் என்னைவிட முன்னிடம் பெற்றவர்; ஏனெனில் எனக்கு முன்பே இருந்தார் என்று நான் இவரைப் பற்றியே சொன்னேன்”என்றார். அந்தச் சீடர் இருவரும் அவர் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின் தொடர்ந்தனர். யோவான் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின்தொடர்ந்த இருவருள் அந்திரேயா ஒருவர். அவர் சீமோன் பேதுருவின் சகோதரர். அவர் போய் முதலில் தம் சகோதரரான சீமோனைப் பார்த்து, “மெசியாவைக் கண்டோம்” என்று சொல்லி, சீமோனை இயேசுவிடம் அழைத்து வந்தார். இயேசு அவரைக் கூர்ந்து பார்த்து, “நீ யோவானின் மகன் சீமோன். இனி ‘கேபா’ எனப்படுவாய்”என்றார். ‘கேபா’ என்றால் ‘பாறை’ என்பது பொருள்.

திருத்தூதர் பேதுரு திருமணமானவர். அன்று இயேசு கலிலேயாவிலுள்ள கப்பர்நாகும் தொழுகைக் கூடத்தில் தீய ஆவியான பேய் பிடித்திருந்த ஒருவரைக் குணமாக்கினார். பின், தொழுகைக் கூடத்தைவிட்டு, சீமோன் வீட்டிற்குள் சென்றார். சீமோனின் மாமியார் கடுங்காய்ச்சலால் துன்புற்ற நிலையில் இருந்தார். அவர்கள் அவருக்காக இயேசுவிடம் வேண்டினார்கள். இயேசு அவரருகில் நின்று, காய்ச்சலைக் கடிந்துகொள்ள அது அவரைவிட்டு நீங்கிற்று. உடனே அவர் எழுந்து அவர்களுக்குப் பணிவிடை செய்தார் (மத்.8:14-17;மாற்.1:29-34;லூக்.4:38-39).

சிலுவை மரணம், தாழ்மை, தவறுகள், துணிச்சல் என, திருத்தூதர் பேதுருவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள் நிறையவே உள்ளன. தவறுகள் செய்பவரை இறைவன் எவ்வாறு தம் திருப்பணிக்குப் பயன்படுத்துகிறார் என்பதற்கு திருத்தூதர் பேதுருவின் வாழ்வே சான்று. அடுத்த வார நிகழ்ச்சியிலும், தொடர்ந்து பேதுரு பற்றிக் கேட்போம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.