2017-04-12 16:11:00

ஈராக்கில், தீக்கிரையான கோவில்களில், குருத்தோலை ஞாயிறு


ஏப்.,12,2017. இஸ்லாமிய அரசு என்றழைக்கப்படும் தீவிரவாத அமைப்பினரால், ஈராக் நாட்டின், Qaraqosh, மற்றும் Karamles ஆகிய நகரங்களில், தீக்கிரையாக்கப்பட்ட கோவில்களில், ஏப்ரல் 9, கடந்த ஞாயிறன்று கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஞாயிறு வழிபாட்டினை நடத்தினர் என்று ICN கத்தோலிக்கச் செய்தி கூறுகிறது.

Qaraqosh நகரின் வீதிகளில், நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள், குருத்தோலையையும், "ஆண்டவர் பெயரால் வருபவர் ஆசி பெற்றவரே, அல்லேலூயா" என்ற வாசகங்கள் அடங்கிய விரிப்புக்களையும் ஏந்தியபடி நடந்து சென்றனர் என்று ICN செய்தி மேலும் கூறுகிறது.

2014ம் ஆண்டு, Qaraqosh நகர், தீவிரவாதிகளின் கரங்களில் சிக்கியபின், அங்கிருந்து 50,000த்திற்கும் அதிகமான கிறிஸ்தவர்கள் வெளியேறிவிட்டனர் என்றும், அந்நகரின் விடுதலைக்குப் பின், நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் மீண்டும் அங்கு குடியேறும் முயற்சியில் உள்ளனர் என்றும் கிறிஸ்தவ தலைவர் ஒருவர் கூறினார்.

800 கிறிஸ்தவ குடும்பங்களைக் கொண்டிருந்த Karamles நகரில், 600க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள், இஞ்ஞாயிறு குருத்தோலை திருப்பலியைக் கொண்டாடினர் என்று கூறப்படுகிறது.

ஆதாரம் : ICN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.