2017-04-11 14:27:00

விவிலியத்தேடல் : வேதனை வேள்வியில் யோபு – பகுதி 15


நமது உறவுகள், குறிப்பாக, நம் பெற்றோர், உடன்பிறந்தோர் என்ற உறவுகள், நமக்கு வழங்கப்பட்டுள்ள வரங்கள். இவற்றை நாம் தெரிவு செய்வதில்லை. இதற்கு மாறாக, நமது நண்பர்கள், நாம் தெரிவு செய்யும், தேடி அடையும் வரங்கள். நண்பர்களைப் பற்றி, பல அழகிய கருத்துக்கள் சொல்லப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு சில, நம் விவிலியத் தேடலை இன்று துவக்கி வைக்கின்றன.

"தனியே ஒளியில் நடப்பதைவிட, இருளில், நண்பர் ஒருவரோடு நடப்பது மேல்" என்று, ஹெலன் கெல்லர் (Helen Keller) அவர்கள் கூறியுள்ளார். குழந்தைப்பருவத்திலேயே, பார்க்கும், கேட்கும், திறன்களை இழந்த சிறுமி கெல்லர் அவர்கள், புகழ்பெற்ற எழுத்தாளராக, பேச்சாளராக மாறினார். அவரில் வியக்கத்தக்க மாற்றங்களை உருவாக்கியவர், அவரது ஆசிரியராக, நண்பராக விளங்கிய ஆன் சல்லிவன் (Anne Sullivan) அவர்கள்.

அமெரிக்க ஐக்கிய நாட்டின் 16வது அரசுத்தலைவராகப் பொறுப்பேற்ற ஆபிரகாம் லிங்கன் அவர்கள், நாட்டில் அடிமைத்தனத்தை ஒழிக்க முற்பட்டார். அவரது முயற்சி, உள்நாட்டுப்போராக உருவெடுத்தபோது, லிங்கன் அவர்களுக்குத் துணையாக, படைத்தளபதியாக பணியாற்றியவர், யுலிசெஸ் கிரான்ட் (Ulysses Grant). கிரான்ட் அவர்கள், அமெரிக்க ஐக்கிய நாட்டின் 18வது அரசுத் தலைவராகப் பொறுப்பேற்று, அடிமைத் தனத்தை ஒழிக்க தொடர்ந்து பாடுபட்டார். நண்பர்களைக் குறித்து அவர் கூறும் வார்த்தைகள், பொருள் மிக்கவை: "பகைமையின் நெருக்கடிகள் என்னைச் சூழும்போது, என் நண்பராக துணை நிற்பவரை நான் பெரிதும் மதிக்கிறேன். ஒளியோடு, வளமோடு நான் வாழும் காலத்தில், என்னுடன் சேர்ந்து, வாழ்வைச் சுவைக்க முன்வருபவரைவிட, நான் இருளில் தவிக்கும்போது, அந்த இருளை ஓரளவாகிலும் நீக்க முன்வருபவரையே நான் நம்புகிறேன்" என்று, கிரான்ட் அவர்கள் கூறிய கருத்துக்கு வடிவம் தருவதுபோல், யோபின் நண்பர்கள், நடந்துகொண்டனர் என்பதை, யோபு நூலின் துவக்கத்தில் நாம் காண்கிறோம். "உலகம் முழுவதும் ஒருவரைவிட்டு வெளியேறும் வேளையில், உள்ளே நுழைபவரே, உண்மையான நண்பர்" என்று வால்டர் வின்செல் (Walter Winchell) என்பவர் சொன்ன வார்த்தைகளும், உண்மையான நண்பர்களை அடையாளம் காட்டுகின்றன.

பொருள் செல்வம், மக்கள் செல்வம், உடல்நலம் என்று, யோபைச் சூழ்ந்திருந்த ஆனந்த உலகம் முழுவதும் அவரைவிட்டு விடைபெற்ற வேளையில், எலிப்பாசு, பில்தாது, சோப்பார் என்ற மூன்று நண்பர்கள், யோபைத் தேடிவந்தனர். யோபின் துயரத்தில் பங்கேற்க, அவர்களும், அவரோடு சேர்ந்து, ஏழு பகலும், ஏழு இரவும், ஒன்றும் பேசாமல், தரையில் அமர்ந்திருந்தனர் என்று யோபு நூல் 2ம் பிரிவில் வாசிக்கிறோம் (காண்க. யோபு 2:13). அந்த முதல் ஏழு நாட்கள் நிகழ்ந்தவை அனைத்தும், ஆழமான, உண்மையான நட்புக்கு இலக்கணமாய் அமைந்தது. அதைத் தொடர்ந்து, அங்கு நிகழ்ந்தது, நமக்கு, நட்பின் மற்றொரு முகத்தைக் காட்டுகிறது.

சிலவேளைகளில், நண்பர்கள் மிக நெருங்கிப் பழகுவதால், ஒருவரையொருவர் புண்படுத்தவும் வாய்ப்புக்கள் உருவாகின்றன. நண்பனுக்கு உதவுகிறோம் என்ற எண்ணத்தில், அவருக்கு 'உபத்திரவமாக' மாறும் நண்பர்களும் உண்டு. "நண்பன்தானே" என்ற கூடுதல் சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தும்போது, நண்பனின் மனதைப் புண்படுத்தும் சூழல்களும் எழுகின்றன. இத்தகைய ஒரு சூழல், யோபுக்கும், அவரது மூன்று நண்பர்களுக்கும் இடையே எழுந்தது.

எலிப்பாசு, பில்தாது, சோப்பார் என்ற மூவரும், நண்பர்கள் என்ற அளவில் இருந்தவரை, யோபின் துன்பங்களில் மௌனமாகப் பங்கேற்றனர். ஆனால், அந்த முதல் ஏழுநாள்களுக்குப் பின், அவர்கள் மூவரும், நண்பர்கள் என்ற நிலையைக் கடந்து, யோபுக்கு அறிவுரை வழங்குபவர்களாக மாறினர். தங்களுக்குத் தெரிந்த இறையியலின் அடிப்படையில், அவர்கள் யோபுக்கு அறிவுரை வழங்கினர்.

அத்துடன் நின்றுவிடாமல், நன்னெறி, புண்ணியம், பாவம் என்று அவர்கள் உருவாக்கி வைத்திருந்த அளவுகோல்களைக் கொண்டு, யோபின் நடத்தையை, வாழ்க்கையைத் தீர்ப்பிடும் நீதிபதிகளாகவும் மாறினர். இத்தகைய ஒரு சூழலில், யோபுக்கும், அவரது நண்பர்களுக்கும் இடையே, ஒரு வழக்காடு மன்றம் உருவானது.

நீதிபதிகளாக மாறிவிட்ட இந்த மூன்று நண்பர்களும், யோபிடம் பேச ஆரம்பித்தபோது பயன்படுத்தியச் சொற்கள், அவர்கள் எவ்விதம் அவர்மீது படிப்படியாகப் பொறுமை இழந்தனர் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன. முதலில் பேசிய எலிப்பாசு, யோபின் மீது தான் கொண்டிருக்கும் மதிப்பை உணர்த்தினார்: “பலர்க்கு அறிவுரை பகர்ந்தவர் நீர்! தளர்ந்த கைகளைத் திடப்படுத்தியவர் நீர்! உம் சொற்கள், தடுக்கி விழுவோரைத் தாங்கியுள்ளன; தள்ளாடும் கால்களை உறுதியாக்கியுள்ளன.” (யோபு 4: 3-4) அதன்பின், எலிப்பாசு, யோபிடம் தான் கண்ட குறையை எடுத்துச் சொன்னார்: “ஆனால் இப்பொழுதோ, ஒன்று உமக்கு வந்துற்றதும் வருந்துகின்றீர்; அது உம்மைத் தாக்கியதும் கலங்குகின்றீர்.” (யோபு 4: 5) என்று, யோபிடம் தான் கண்ட குறையைச் சுட்டிக்காட்டினார்.

அவருக்கு அடுத்துப் பேசிய பில்தாது, "எதுவரை இவ்வாறே பேசிக் கொண்டிருப்பீர்?" (யோபு 8: 2) என்று, சலிப்பு கலந்த தொனியில் பேச ஆரம்பித்தார். மூன்றாவதாகப் பேசிய சோப்பார், இன்னும் சிறிது கடுமையாக தன் உரையைத் துவக்கினார். ஆரம்பத்திலேயே, அவர் தன் தீர்ப்பை வழங்க ஆரம்பித்தார்.: "மிகுதியாகப் பேசுவதால், ஒருவர் நேர்மையாளர் ஆகிவிடுவாரோ? உம் வீண் வார்த்தைகள் மனிதரை வாயடைத்திடுமோ?" (யோபு 11: 2-3) என்று, யோபின் மனதைப் புண்படுத்தும் வகையில் அவர் பேச ஆரம்பித்தார்.

நம் இல்லங்களில் நிகழும் ஒரு காட்சியை கற்பனை செய்து பார்ப்போம். துன்பத்தில் சிக்கியிருக்கும் பலர், தங்கள் துயரங்களை வெளிப்படுத்த வார்த்தைகளைக் கொட்டுவர். அவ்வாறு நிகழும்போது, 'அவர் புலம்பித் தீர்க்கிறார்' என்று நாம் சொல்வதுண்டு. அந்தப் 'புலம்பல்களில்' முன்பின் முரணான கருத்துக்கள் வெளிவரலாம். சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்வதுபோல் தெரியலாம். அந்தப் பாணியில், யோபு, தன் துயரத்தை, ஆதங்கத்தை, ஆற்றாமையைக் கொட்டிக்கொண்டிருந்தார். அத்தகையப் 'புலம்பலில்' குறைகாண முற்படுவது, துன்புறுபவரை மேலும் காயப்படுத்தும். யோபின் நண்பர், சோப்பார் அதைத்தான் செய்தார்.

தன் நண்பர்கள் மூவரும் ஒருவர்பின் ஒருவராக தொடர்ந்து தாக்கியதால் காயப்பட்டிருந்த யோபு, அவர்களைப் பற்றி தான் கொண்டிருந்த கருத்தை, 12ம் பிரிவின் துவக்கத்தில் வெளிப்படுத்தினார். யோபின் சொற்களில், கோபமும், கேலியும் கலந்திருப்பதை நம்மால் உணர முடிகிறது: "உண்மையிலும் உண்மை; நீங்கள்தாம் எல்லாம் தெரிந்தவர்கள். உங்களோடு ஞானமும் ஒழிந்துவிடும்! உங்களைப்போல அறிவு எனக்கும் உண்டு; உங்களுக்கு நான் தாழ்ந்தவன் அல்லன்." (யோபு 12: 2-3)

இதைத் தொடர்ந்து, 12ம் பிரிவில், இறைவனின் ஆற்றல் குறித்து யோபு கூறும் வரிகள், ஆழமான கவிதை வரிகள். ஆக்கவும், அழிக்கவும், கட்டவும், தகர்க்கவும் வல்லவரே இறைவன் என்பதை, யோபு இவ்விதம் நமக்கு உணர்த்துகிறார்:

யோபு 12: 13-25

ஞானமும் வலிமையும் அவரிடமே உள்ளன! ஆலோசனையும் அறிவும் அவர்க்கே உரியன! இதோ! அவர் இடித்திடுவதை எழுப்பிட இயலாது; அவர் அடைத்திடுபவரை விடுவித்திட முடியாது. இதோ; அவர் மழையைத் தடுப்பாரெனில், அனைத்தும் வறண்டுபோம்; வெளியே அதை வரவிடுவாரெனில், நிலத்தையே மூழ்கடிக்கும்.

வல்லமையும் மதிநுட்பமும் அவருக்கே உரியன; ஏமாற்றுவோரும் ஏமாறுவோரும் அவருடையோரே! அமைச்சர்களை அறிவிழக்கச் செய்கின்றார்; நடுவர்களை மடையர்கள் ஆக்குகின்றார். அரசர்களின் அரைக்கச்சையை அவிழ்க்கின்றார்; அவர்களின் இடையில் கந்தையைக் கட்டுகின்றார்.

குருக்களைத் தம் நிலையிலிருந்து விழச் செய்கின்றார்; நிலைபெற்ற வலியோரைக் கவிழ்த்து வீழ்த்துகின்றார்; வாய்மையாளரின் வாயை அடைக்கின்றார்; முதியோரின் பகுத்துணர் மதியைப் பறிக்கின்றார்; உயர்குடி மக்கள் மீது வெறுப்பினைப் பொழிகின்றார்; வலியோரின் கச்சை கழன்றுபோகச் செய்கின்றார்.

புரியாப் புதிர்களை இருளினின்று இலங்கச் செய்கின்றார். காரிருளை ஒளிக்குக் கடத்திவருகின்றார். மக்களினங்களைப் பெருகச் செய்கின்றார்; பின்பு அழிக்கின்றார்; மக்களினங்களைப் பரவச் செய்கின்றார்; பின், குறையச் செய்கின்றார். மண்ணக மக்களின் தலைவர்தம் அறிவாற்றலை அழிக்கின்றார். வழியிலாப் பாழ்வெளியில் அவர்களை அலையச் செய்கின்றார்.

ஆக்கவும் அழிக்கவும், உயர்த்தவும் தாழ்த்தவும், கொடுக்கவும் பறிக்கவும் இறைவன் ஒருவரால் மட்டுமே இயலும் என்று யோபு விவரிக்கும் இவ்வரிகள், நம்மை லூக்கா நற்செய்தியின் முதல் பிரிவுக்கு அழைத்துச் செல்கின்றன. அங்கு, தாழ்ந்தோரை உயர்த்தி, வலியோரைத் தாழ்த்தும் இறைவனைப் பற்றி, அன்னை மரியா பாடியுள்ளார். அன்னை மரியாவின் புகழ் பாடலில் ஒலிக்கும் இவ்வரிகள் நம் தேடலை இன்று நிறைவு செய்யட்டும்:

லூக்கா நற்செய்தி 1: 49-53

வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தூயவர் என்பதே அவரது பெயர். அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார். அவர் தம் தோள் வலிமையைக் காட்டியுள்ளார்; உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருகிறார்.

வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்; தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார். பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்; செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.