2017-04-11 15:21:00

மருத்துவமனை குடும்பச் சூழலைக் கொண்டிருக்க வேண்டும்


ஏப்.11,2017. “நம்மை மீட்பதற்காக இயேசு வந்தார்; பணி, வழங்குதல், தன்னையே மறத்தல் ஆகியவற்றின் பாதையில் இயேசுவைத் தேர்ந்துகொள்வதற்கு நாம் அழைக்கப்பட்டுள்ளோம்” என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில், இச்செவ்வாயன்று வெளியாயின.   

மேலும், உரோம் பம்பினோ ஜேசு சிறார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சிறார் குழு ஒன்று, இத்திங்கள் மாலையில், வத்திக்கானில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்து உரையாடி, புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டது.

குழந்தை இயேசு என்று பெயர் கொண்ட இம்மருத்துவமனையின் தலைவர் மரியெல்லா எனோக், இத்தாலிய அரசின் ராய் தொலைக்காட்சியின் இயக்குனர் அந்தோனியோ காம்போ தல்ஓர்த்தே உட்பட, இம்மருத்துவமனையின் சில மருத்துவர்களும் செவிலியரும், நோயுற்ற சிறாரின் பெற்றோரும், இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

5 முதல் 18 வயது வரையுள்ள நோயுற்ற சிறார் அளித்த நன்றிக் கடிதத்தைப் பெற்றுக்கொண்ட திருத்தந்தை, பம்பினோ ஜேசு மருத்துவமனை, மனிதாபிமானத்திற்கு ஒரு சான்றாக உள்ளது என்று சொல்லி, அம்மருத்துவமனை பணியாளருக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்தார்.

மருத்துவமனை, வரவேற்கும் குடும்பச் சூழலைக் கொண்டிருக்க வேண்டுமெனவும், ஒவ்வொரு நோயாளிக்கும் ஒரு பெயர் உள்ளது, ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட கதை உள்ளது எனவும், நோயைவிட இவை முக்கியம் எனவும் கூறினார் திருத்தந்தை.  மருத்துவமனைக்கு வருகின்ற ஒவ்வொரு நோயாளியின் தேவையின் மீது கவனம் செலுத்தும் இடமாக, முதலில் மருத்துவமனை அமைய வேண்டுமென்றும், மருத்துவமனைக்குச் செல்வது நோயாளிக்கு அச்சத்தையூட்டும், ஆயினும், மருத்துவர்கள் மற்றும், செவிலியரின் அன்பான கவனிப்பு, அந்த அச்சத்தை அகற்றும் என்றும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.