2017-04-11 16:01:00

ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் இளம் அமைதித் தூதர் மலாலா


ஏப்.11,2017. சிறுமிகளின் கல்வியில் சிறப்புக் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்தில், ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் அமைதித் தூதராக, சிறார் உரிமை ஆர்வலரும், நொபெல் அமைதி ஆர்வலருமான மலாலா யூசாப்சாய் அவர்களை நியமித்துள்ளார் ஐ.நா.பொதுச் செயலர், அந்தோனியோ கூட்டெரெஸ்.

நியு யார்க் ஐ.நா. தலைமையகத்தில், அறங்காவலர் அவையில் இத்திங்களன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், மலாலா அவர்களை நியமித்தார், ஐ.நா.பொதுச் செயலர், கூட்டெரெஸ்.

இந்நிகழ்வில் உரையாற்றிய கூட்டெரெஸ் அவர்கள், மலாலா அவர்கள், மிகவும் கடினமான இடங்களைப் பார்வையிட்டுள்ளார், பல புலம்பெயர்ந்தவர் முகாம்களுக்குச் சென்றுள்ளார் மற்றும், லெபானின் Beka பள்ளத்தாக்கில், மலாலா நிறுவனம் பள்ளிக்கூடம் நடத்துகின்றது என்று கூறினார்.

மலாலா அவர்கள், ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் வரலாற்றில், முதன்முறையாக இளம் அமைதித் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இது, கூட்டெரெஸ் அவர்கள், ஐ.நா.பொதுச் செயலராகப் பணியேற்றபின் இடம்பெற்றுள்ள முதல் நியமனம் ஆகும்.

பள்ளிக்கூடம் சென்று திரும்புகையில், 2012ம் ஆண்டில் தலிபான்களால் சுடப்பட்டவர் மலாலா.

ஆதாரம் : UN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.