2017-04-10 16:19:00

ஏழை நாடுகளின் வாழ்வை பணயம் வைக்காத திட்டங்கள் தேவை


ஏப்.,10,2017. மனித வாழ்விலும். படைப்பிலும் இன்றைய பயோடெக்னாலஜி எனப்படும் உயிரி தொழில்நுட்பத்தின் தீர்மானங்கள் கொண்டுவரும் பாதிப்புகள் குறித்து அறிவியலாளர்கள் கவனமாக செயல்படவேண்டும் என அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உயிரி தொழில்நுட்ப வல்லுனர்களையும், அறிவியலாளர்களையும் இத்திங்களன்று காலை திருப்பீடத்தில் சந்தித்து உரை நிகழ்த்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மனித வாழ்வுக்கும் இயற்கையின் பாதுகாப்புக்கும் தேவையான ஒன்றிணைந்த வளர்ச்சியை அறிவியலும், தொழில்நுட்ப ஆய்வுகளும் தங்களுக்கிடையே கொண்டிருக்க வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

மனித வாழ்வை தங்களுக்குச் சாதகமாக, தங்கள் வழியில் பயன்படுத்த முனையும் தொழில்நுட்பம், மற்றும், அறிவியலின் தவறான அணுகுமுறைகள், உலகில் எதிர்விளைவுகளையேக் கொணரும் என்பதால், அத்தகைய வழிமுறைகள், முன்கூட்டியே கண்டுணரப்பட்டு தடுக்கப்படவேண்டும் என அழைப்பு விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஏழை நாடுகளின் வளர்ச்சியையும் வாழ்வையும் பணயம் வைத்து பணக்கார நாடுகளின் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சிகள் மேற்கொள்ளப்படுவது, தடுக்கப்படவேண்டும் எனவும், அறிவியலாளர்களிடம் கேட்டுக்கொண்டார், திருத்தந்தை.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.