2017-04-05 16:16:00

புதன் மறைக்கல்வியுரை : எதிர்நோக்குக் குறித்து விளக்கமளித்தல்


ஏப்.,05,2017. வானம் தெளிவாக இருக்க, சூரியனும் தன் கதிர்களை ஒளிமயமாக, அதேவேளை, அதிக வெப்பமின்றி விரிக்க, வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் திருத்தந்தையின் மறைக்கல்வியுரை இடம்பெற்றது. பல ஆயிரக்கணக்கான மக்கள், வளாகத்தை நிறைத்திருக்க, 'கிறிஸ்தவ எதிர்நோக்கு' குறித்த தன் மறைக்கல்வி உரையைத் தொடர்ந்தார், திருத்தந்தை பிரான்சிஸ். 'நம்முள் இருக்கும் கிறிஸ்தவ எதிர்நோக்கு குறித்து விளக்கமளிக்க நாம் எப்போதும் தயாராக இருக்கவேண்டும்' என்ற கருத்தை மையமாக வைத்து திருத்தந்தையின் உரை இடம்பெற்றது.

அன்பு சகோதர சகோதரிகளே! கிறிஸ்தவ எதிர்நோக்கு குறித்த நம் தொடர் மறைக்கல்வி உரையில், தற்போது நாம், புனித பேதுருவின் முதல் மடல் மீது நம் கவனத்தைத் திருப்புவோம். இறந்தோரிடமிருந்து இயேசு உயிர்பெற்று எழுந்தது குறித்து, நாம் பெருமகிழ்ச்சியடையவும், அவரை நம் இதயங்களில் வைத்து வணங்கவும், புனித பேதுரு நமக்கு ஊக்கமளிக்கிறார். இயேசுவில் புதிய வாழ்வு எனும் கொடையை நாம் பெற்றுள்ள காரணத்தால், நமக்குள் இருக்கும் எதிர்நோக்கு குறித்து நாம் விளக்கமளிக்கக் கடமைப்பட்டுள்ளோம், என்கிறார் புனித பேதுரு. நம் சகோதர சகோதரிகளின் தேவைகளை அன்புடன் கூடிய அக்கறையில் இயேசு அணுகியது போலவும், நமக்குக் குற்றமிழைத்தவர்களை மன்னிப்பதன் வழியாகவும், நாம் இயேசுவைப் பின்பற்றி, நம் எதிர்நோக்கை வெளிப்படுத்த வேண்டும். 'நன்மை செய்து துன்புறுவது மேல்' என்கிறார் புனித பேதுரு. ஏனெனில், இவ்வழியாகத்தான் நாம், மீட்பைக் கொணர்ந்த இயேசுவின் துன்பத்தைப் பின்பற்றி, கடவுளின் முடிவற்ற அன்பிற்குச் சாட்சிகளாக விளங்குகிறோம். இந்த முடிவற்ற அன்பைத்தான், இயேசு, தன் சிலுவையில் வெளிப்படுத்தி, உயிர்ப்பில் முத்திரை பதித்தார். அந்த அன்பே, நம் அனைத்து எதிர்நோக்கின் ஆதாரம். இயேசுவின் இரக்கத்தையும், அமைதியையும் இவ்வுலகிற்குக் கொணரவேண்டும் என்ற நோக்கத்தில், நமக்குள் குடியிருந்து, நம் வழியாகச் செயல்படும் இயேசு எனும் எதிர்நோக்கை, நம் வாழ்வு வழியாக ஒளிர்விடச் செய்வோமாக.

இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அண்மையில், இரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சுரங்க இரயில் பாதையில் இடம்பெற்ற வெடிகுண்டு தாக்குதல் குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டார். இறந்தோரின் ஆன்மாக்களை இறைவனின் கைகளில் ஒப்படைக்கும் அதேவேளை, இறந்தோரின் குடும்பத்தினர், மற்றும், இதனால் துன்புறுவோர் அனைவருக்கும் அருகில், தான் அன்மீக முறையில் இருப்பதாகவும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

சிரியாவின் இட்லிப் மாவட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற தாக்குதலில், பல குழந்தைகள் உட்பட எண்ணற்றோர் உயிரிழந்தது குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்ட திருத்தந்தை, அந்நாட்டு அரசியல் தலைவர்கள், அனைத்துலக தலைவர்கள் என அனைவரின் மனச்சான்றிற்கும் அழைப்பு விடுத்தார். தொடர்ந்து பல காலமாக துன்பங்களை அனுபவித்துவரும் சிரியா மக்களின் இத்துயர் நிலைகள் நிறுத்தப்படவும், அவர்களுக்கு மனிதாபிமான உதவிகள் சென்றடையவும் அழைப்பு விடுப்பதாகவும் உரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ். பின், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.