2017-04-05 15:50:00

சாம்பலில் பூத்த சரித்திரம் : திருத்தூதர்கள் காலம் பாகம் 11


ஏப்.05,2017.   இமாலயாவிற்கு தெற்கே, ஆசியாவின் ஒரு பகுதியாக இருந்த தற்போதைய ஆப்கானிஸ்தான், பலுசிஸ்தான், பஞ்சாப், சிந்து ஆகிய பகுதிகளின் அரசராக, கி.பி.46ம் ஆண்டில், Gondophernes  அல்லது Guduphara என்ற பெயரில் ஓர் அரசர் ஆட்சி செய்தார் எனக் கூறப்படுகின்றது. இந்த அரசரின் கட்டளைப்படி, திருத்தூதர் தோமா ஈட்டியால் குத்திக் கொலை செய்யப்பட்டார் என, கடந்த வார நிகழ்ச்சியில் கேட்டோம். மேலும், எப்ரேம், சைரஸ், அம்புரோஸ், புலினுஸ், ஜெரோம், தூர்ஸ் நகர் கிரகரி ஆகியோரும், இன்னும் பல எழுத்தாளர்களும், திருத்தூதர் தோமா இந்தியாவில் நற்செய்தி அறிவித்தார் என எழுதியுள்ளனர். யுசேபியுஸ் என்ற புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர் இவ்வாறு கூறுகிறார். "தோமா, திருத்தூதர் யூதா ததேயுவை, Edessaவிலிருந்த அப்கர் என்ற அரசருக்கு திருமுழுக்கு கொடுக்க அனுப்பிய பின், தமக்கென பார்த்தியா மீட்ஸ், பெர்ஷியா இன்னும் பல அண்டை நாடுகளைத் தெரிந்துகொண்டு மறைபரப்புப் பணியாற்றினார். அப்போதுதான் தோமா இந்தியா சென்றார். "தோமாவின் பணிகள்" என்ற ஒரு நூல், கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் முதல் கால் பகுதியிலேயே மக்களிடம் இருந்ததாக ஆதாரம் இருக்கிறது. இந்தியாவில் இயேசுவின் நற்செய்தியை முதன்முதலில் அறிவித்தவர் இவரே என்று பழங்கால கிறிஸ்தவ மரபும், ஏடுகளும் சான்று பகர்கின்றன. கேரளாவில் வாழும் தோமா கிறிஸ்தவர்களும் இதற்குச் சான்றாக உள்ளனர்.

கொண்டோபெர்னஸ் (Gondophernes) அல்லது குடுப்பாரா (Cudupara) என்ற மன்னரது ஆட்சி, கி.பி.46ம் ஆண்டில் பெஷாவர் வரை பரவிக்கிடந்தது. பஞ்சாபிலிருந்து கொச்சின், திருவிதாங்கூர் சிற்றரசு வரைக்கும் பரவியிருந்தது. இப்பகுதியினர், "புனித தோமாவின் கிறிஸ்தவர்கள்" என்றே அழைக்கப்பட்டு வந்தனர். தங்களுடைய திருவழிபாட்டுக்கு "சிரியக்" என்ற மொழியையே அன்று முதல் இன்றுவரை அவர்கள் பயன்படுத்தியதோடு, "சிரியன் கிறிஸ்தவர்கள்" என்றும் இவர்கள் அழைக்கப்படுகிறார்கள். சிரியக் மொழி பெர்ஷியா, மெசப்பொத்தேமியா பகுதிகளிலிருந்து இறக்குமதியானது என, உறுதியாகச் சொல்லலாம். தோமா, முதன்முதலில் பண்டைய சேர நாட்டுத் துறைமுகமான முசிறியில் (தற்போது இது கேரளாவிலுள்ளது) கி.பி. 52-ல் பாதம் பதித்தார். தென் இந்தியாவின் கடற்கரையோரமாக நற்செய்தி பணியாற்றிய இவர், ஏழு ஆலயங்களை நிறுவினார். அவை கொடுங்கல்லூர், பழவூர், கொட்டகாவு, கொக்கமங்கலம், நிரனம், நிலக்கல், கொல்லம், வேம்பார், திருவிதாங்கோடு (கன்னியாகுமரி மாவட்டம்) ஆகிய இடங்களில் அமைந்துள்ளன. இவர் குமரி கடற்கரை வழியாக சென்னை வந்தடைந்தார் எனவும், அங்கே பலரையும் மனந்திருப்பிய பின் சென்னை, "சிறிய மலை" என்ற பெயர் கொண்ட இடத்தில் கி.பி 72-ல் குத்திக் கொல்லப்பட்டார் எனவும் வரலாறு கூறுகின்றது. அவர் மைலாப்பூரில் அடக்கம் பண்ணப்பட்டதற்கு கல்லறை ஆதாரங்களும் உள்ளன. பதின்மூன்றாம் நூற்றாண்டில், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மார்கோ-போலோவின் குறிப்புப்படி, சென்னை அருகே அம்புகளால் குத்தப்பட்டு இவர் இறந்தார் எனத் தெரிகிறது.

1522ம் ஆண்டு போர்த்துக்கீசியர் சென்னை வந்தபோது, திருத்தூதர் தோமா அவர்களின்  கல்லறையை கண்டுபிடித்திருக்கிறார்கள். அவர்கள் கண்டுபிடித்த பொருட்கள் மைலாப்பூரில் சாந்தோம் பேராலயத்திலேயே வைக்கப்பட்டுள்ளன. இவரின் திருப்பண்டங்கள் பலவும் நான்காம் நூற்றாண்டில் எடெஸ்ஸாவுக்குக் கொண்டு செல்லப்பட்டதாக "தோமாவின் பணிகள்" என்ற நூலில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து மெசபத்தோமியாவுக்கு எடுத்து செல்லப்பட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. பின்னர் எடெஸ்ஸாவிலிருந்து அப்ரூஸ்ஸியில் உள்ள ஓர்டோனாவிற்கு(Ordon) எடுத்துச் செல்லப்பட்டு இன்றுவரை புனிதமாக காப்பாற்றப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இயேசு கிறிஸ்துவின் பன்னிரெண்டு சீடர்களில் ஒருவரான புனித தோமா, பல்வேறு போராட்டங்களை ஏற்று இந்தியாவுக்கு போதிக்க வந்தார். அவர் மறைப்பணியாற்றிய இடங்களில் மிக முக்கியமானது சென்னை சைதாப்பேட்டையிலுள்ள சின்னமலை ஆரோக்கிய அன்னை திருத்தலம் ஆகும். சின்னமலை, பாரத மண்ணுக்கே இயேசுவின் விழுமியங்களை இன்றும் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. புனித தோமாவின் புண்ணான கால்கள் அழுந்திப் பதிந்து உரமேறிய ஞான பூமி, இந்தப் புண்ணிய பூமி. இங்கு அமைந்துள்ள சிற்றாலயத்தின் அடியில் ஒருவர் மட்டுமே நுழையக்கூடிய குறுகலான வாசலில் குனிந்துகொண்டே சென்றால் புனிதரின் முழு உருவ சிலை ஆசி கூறி நிற்பதைக் காணலாம். சற்று வலப்பக்கம் திரும்பினால் சிறு துவாரத்தை நாம் காணலாம். பகைவர் தன்னைக் கொல்ல வருவதை அறிந்ததால் அங்கிருந்து, பரங்கிமலை எனவும், தோமையார் மலை எனவும் அழைக்கப்படும் மலைக்குத் தப்பிச் சென்றார். குகையின் பின்பக்கம் சற்று உயரத்தில் தோமா மறைப்பணியாற்றுகையில் தாகத்தோடு வந்த மக்களுக்காக தன் கோலால் தட்டி உருவாக்கிய வற்றாத நீரூற்றை நாம் காணலாம். இவர், தன் கையாலேயே செதுக்கிய கற்சிலுவை இன்றும் சாட்சியாய் நிற்கிறது. அதைச் சுற்றிலும் அவர் கால் தடங்களும், உள்ளங்கைத் தடங்களும் இன்றும் அவரின் வருகையை உறுதி செய்கின்றன.

இயேசு கிறிஸ்துவின் இறப்பின் நிகழ்வுகளைச் சித்தரிக்கும் சிலுவைப்பாடுகள் அனைத்தும் அருமையாக வடிவமைக்கப்பட்டுள்ளதை நாம் காணலாம். இயேசுவின் மலைப்பொழிவை ஒத்த சிறு சிறு குன்றுகள் தோமாவின் உயர்ந்த இலட்சியங்களையும் கொள்கைப் பிடிப்பையும் பறைசாற்றுகின்றன. இங்கு அமைந்துள்ள ஆறு பிரமாண்ட தூண்களைக் கொண்ட வட்ட வடிவ ஆரோக்ய அன்னை ஆலயம் காண்பதற்கு அருமையாய் அமைந்துள்ளது. இன்றுவரை புனித தோமாவின் திருத்தலங்களான தோமா மலை, சாந்தோம் பேராலயம், தோமா கல்லறை ஆகியவற்றுக்கு வருகைதரும் உள்நாட்டு, வெளிநாட்டு பக்தர்கள் சின்னமலை, புண்ணிய பூமியையும் தரிசித்து அற்புத வரங்கள் பெற்றுச் செல்கின்றனர்.

எல்லாம் வல்ல தந்தையே! புனித தோமா, நீரே என் ஆண்டவர் என்று ஏற்றுக்கொண்டதுபோல, நாங்களும் உம்மில் எம் வாழ்வை பயணமாக்க வரம் தாரும்.     

ஆதாரம் : இணையதளங்கள்/ வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.