2017-04-05 16:32:00

உரோம் பங்குகளில் அடைக்கலம் பெற்றுள்ள 70 குடும்பங்கள்


ஏப்.,05,2017. வத்திக்கானில் அடைக்கலம் பெற்றுள்ள புலம்பெயர்ந்தோர் குடும்பங்களில், இரு கிறிஸ்தவ குடும்பங்கள், இஸ்லாமிய அரசு என்றழைக்கப்படும் தீவிரவாத குழுவிடமிருந்து தப்பித்து வந்தவை என்று, ஏப்ரல் 3, இத்திங்களன்று வத்திக்கானிலிருந்து வெளியான ஒரு செய்திக்குறிப்பு கூறுகிறது.

ஐரோப்பிய நாடுகளில் உள்ள பங்குக்கோவில்கள் அனைத்தும், புலம்பெயர்ந்தோருக்கு அடைக்கலம் தரவேண்டும் என்று, 2015ம் ஆண்டு, செப்டம்பர் 6ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்த அழைப்பைத் தொடர்ந்து, வத்திக்கான், புனித பேதுரு பசிலிக்கா, மற்றும் புனித அன்னா ஆகிய இரு கோவில்களைச் சார்ந்த இல்லங்களில், புலம்பெயர்ந்தோருக்கு வாழுமிடங்கள் வழங்கப்பட்டுள்ளன.

புனித பேதுரு பசிலிக்காவில் அடைக்கலம் பெற்றுள்ள குடும்பம், எரித்திரியா நாட்டிலிருந்து வந்துள்ளது என்றும், புனித அன்னா பங்கு அடைக்கலம் அளித்துள்ள குடும்பம், சிரியாவில் ISIS பிடியிலிருந்து தப்பித்து வந்துள்ளது என்றும், CNA கத்தோலிக்கச் செய்தி கூறுகிறது.

13 பேரைக் கொண்ட இவ்விரு குடும்பங்களைச் சேர்ந்தவர்களும், தங்கள் கிறிஸ்தவ நம்பிக்கைக்காக துன்பங்களை அனுபவித்தவர்கள் என்றும், Sant'Egidio பிறரன்பு அமைப்பின் உதவியுடன் இவர்கள் இத்தாலியை அடைந்தனர் என்றும் CNA கத்தோலிக்கச் செய்தி மேலும் கூறுகிறது.

இதுவரை, 70 குடும்பங்களைச் சேர்ந்த 145 பேர், உரோம் நகரின் பல்வேறு பங்குகளின் ஆதரவால் இத்தாலி நாட்டில் அடைக்கலம் பெற்றுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : CNA/EWTN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.