2017-04-04 15:48:00

விவிலியத்தேடல் : வேதனை வேள்வியில் யோபு – பகுதி 14


 

அச்சிறுமி காட்டில் கிடைத்த உணவை உண்டார். தாகம் தீர்க்க, அருகிலிருந்த ஆற்று நீரைக் குடித்தார். அந்த ஆற்றில், பிணங்கள் மிதந்து வந்தன, அல்லது, கரையோரம் ஒதுங்கியிருந்தன. காட்டில் நடப்பதற்கு உதவியாக, புல்கட்டு ஒன்றை காலடிகளில் கட்டிக்கொண்டு நடந்தார், அச்சிறுமி. 6 வயது கூட நிறையாத அச்சிறுமியின் பெயர், மிர்ரெயில் துவாயிஜீரா (Mirreille Twayigira). அச்சிறுமி இன்று, 28 வயது நிறைந்த இளம் மருத்துவராக மலாவி நாட்டில் பணியாற்றி வருகிறார்.

ருவாண்டா நாட்டில், 1994ம் ஆண்டு நிகழ்ந்த இனமோதல்களில், ஏறத்தாழ 8 இலட்சம் பேர் கொல்லப்பட்டனர். அவர்களில், மிர்ரெயில் அவர்களின் தந்தையும் ஒருவர். தந்தை கொலையுண்டதைத் தொடர்ந்து, மிர்ரெயில் அவர்களின் குடும்பம் ருவாண்டா நாட்டைவிட்டு காங்கோ நாட்டிற்கு தப்பித்துச் சென்றது. அடுத்த சில ஆண்டுகளில், மிர்ரெயில் அவர்களின் அம்மா, தங்கை, பாட்டி, இறுதியில் தாத்தா என்று ஒவ்வொருவராக நோயுற்று இறந்தனர். இன்று அக்குடும்பத்தில் எஞ்சியிருப்பது, மிர்ரெயில் மட்டுமே.

ருவாண்டா நாட்டு இளம்பெண், மிர்ரெயில் அவர்களின் கதையை, இன்று நாம் நினைத்துப் பார்க்க, இரு காரணங்கள் உள்ளன. முதல் காரணம், இன்னும் இரு நாள்களில், அதாவது, ஏப்ரல் 7, வெள்ளியன்று, ருவாண்டா இனப்படுகொலையில் இறந்தோரின் நினைவுநாள் கடைபிடிக்கப்படுகிறது. அந்நாட்டில் நிகழ்ந்த படுகொலைகளில் இறந்தோரைப் பற்றி மட்டும் நினைவுகூராமல், அந்த வேதனை வேள்வியில் புடமிடப்பட்டு, நம்பிக்கை தரும் வகையில் வாழும் மிர்ரெயில் போன்றவர்களையும் இந்நாளில் நினைவுகூரவேண்டும். இது முதல் காரணம்.

இரண்டாவது காரணம், நாம் தேடல் பயணம் மேற்கொண்டுள்ள யோபின் வாழ்க்கையுடன், இளம் மருத்துவர் மிர்ரெயில் அவர்களின் வாழ்க்கையை இணைத்துச் சிந்திப்பது, நமக்குப் பயன்தரும். யோபு நூலில் நாம் சந்திக்கும் கதை நாயகன், நாலாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, எத்தனையோ மனிதர்களுக்கு வாழ்க்கைப் பாடங்களை சொல்லித்தரும் ஒரு பல்கலைக் கழகமாக இருந்து வருகிறார். அதேபோல், இளம்பெண் மிர்ரெயில் அவர்கள், தன் வாழ்வுக் கதையை பலருடன் பகிர்ந்துகொள்வதால், எத்தனையோ பேருக்கு பாடங்கள் புகட்டிவருகிறார்.

தன் மருத்துவப்பணியின் வழியே, மக்களின் உடல்நோயைத் தீர்க்க முயல்வதுபோலவே, மக்களின் ஆன்மநோயை, குறிப்பாக, இளையோரை ஆட்டிப்படைக்கும் அவநம்பிக்கை என்ற நோயைத் தீர்ப்பதும் தன் கடமை என்று கூறும் மருத்துவர் மிர்ரெயில் அவர்கள், வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், மலாவியில் உள்ள பள்ளிகளுக்குச் சென்று, இளம் மாணவ, மாணவியருக்கு நம்பிக்கையூட்டும் வண்ணம் தன் கதையைப் பகிர்ந்துவருகிறார். மார்ச் 8ம் தேதி, உலக பெண்கள் நாள் சிறப்பிக்கப்பட்ட வேளையில், மிர்ரெயில் அவர்கள், வத்திக்கானுக்கு வருகை தந்து, 'நம்பிக்கையின் குரல்கள்' என்ற தலைப்பில் நடைபெற்ற ஒரு பன்னாட்டு கருத்தரங்கில் தன் நம்பிக்கை கதையைப் பகிர்ந்துகொண்டார்.

பள்ளிகளிலும், பன்னாட்டுக் கருத்தரங்குகளிலும், மிர்ரெயில் அவர்கள், தான் பட்ட துயரங்களைப் பகிர்ந்துகொள்ளும் வேளையில், கேட்போர் மனதில், பல்வேறு கருத்துக்கள், உருவாகியிருக்கும். பலர், அவரது வாழ்வை, 'பயங்கரமான சோகக்கதை' என்றும், வேறு சிலர், 'அஞ்சா நெஞ்சத்திற்கும், விடா முயற்சிக்கும் எடுத்துக்காட்டு' என்றும், கூறியுள்ளனர். இளம்பெண் மிர்ரெயில் அடைந்த துன்பங்களை பற்றி கேட்கும் இன்னும் சிலர், அச்சிறுமியோ, அவரது பெற்றோரோ, மூதாதையரோ கடவுளுக்கு எதிராகக் குற்றம் செய்திருக்கவேண்டும் என்ற பாணியில் சிந்தித்திருக்கவும் வாய்ப்புண்டு. துன்பங்களையும், கடவுளையும் இணைத்துப்பேசுவது, நம்மிடையே மிக அதிகமாக உள்ள பழக்கம். கடவுளையும், நம் துன்பங்களையும் இணைத்து நாம் போட்டுவிடும் முடிச்சை அவிழ்க்கமுடியாமல் தவிக்கிறோம்.

கடந்த சில வாரங்களாக யோபும் அவரது நண்பர்களும் மேற்கொண்ட உரையாடலில் நாம் தேடல்களை மேற்கொண்டு வருகிறோம். இவ்வுரையாடலில், கடவுளையும், துன்பத்தையும் இணைத்து அவர்கள் பேசியது, மேலும், மேலும் சிக்கல்கள் பலவற்றை உருவாக்கியது. தான் ஏன் துன்புறுகிறோம் என்பதை அறியமுடியாமல் போராடிக்கொண்டிருந்த யோபை, குற்றவாளிக்கூண்டில் நிறுத்தி, அவரை மேலும் துன்புறுத்துகின்றனர், அவரது நண்பர்களான எலிப்பாசும், பில்தாதும். இவர்களது கண்ணோட்டத்தில், கடவுள், இம்மியளவும் பிசகாமல் இயங்கும் ஒரு 'சூப்பர் கம்ப்யூட்டர்' என்று, யூத மத குரு ஹெரால்டு குஷ்னர் அவர்கள், தன் நூலில் குறிப்பிடுகிறார். இவர்கள் வணங்கும் கடவுள், காசு போட்டால், பொருள்களை வழங்கும் கருவி போல செயல்படுபவர் என்றும்  குஷ்னர் அவர்கள் கூறியுள்ளார்.

இந்தக் கருவிக்குள், பக்தி முயற்சிகள், செபங்கள், பிறரன்புப் பணிகள் என்ற 'காசுகளை'ப் போட்டால், ஆசீர்வாதங்கள் வெளிவரும். என்றாவது ஒருநாள், காசுகளைப் போட்ட பிறகு, ஆசீர்வாதங்கள் வெளிவரவில்லையெனில், நாம் போட்ட காசில் எதோ குறைபாடு என்பதே, யோபின் நண்பர்கள் கொண்டிருந்த கணிப்பு. இத்தனை ஆண்டுகளாக வரங்களையும், ஆசீரையும் பெற்றுவந்த யோபுக்கு, திடீரென அந்த ஆசீர் தடைப்பட்டதென்றால், யோபு, கடவுள் என்ற கருவிக்குள் போட்ட காசில் குறை இருந்திருக்கவேண்டும் என்பது, எலிப்பாசு, பில்தாது இருவரின் குற்றச்சாட்டு.

அவர்களது குற்றச்சாட்டுகளுக்கு நேரடியாகப் பதில் சொல்லாமல், தன் கவனத்தை மீண்டும், மீண்டும் கடவுள் பக்கம் திருப்புகிறார், யோபு. பில்தாது சுமத்திய. குற்றச்சாட்டிற்கு, யோபு கூறும் பதில், 9,10 ஆகிய இரு பிரிவுகளில் இடம்பெற்றுள்ளது. யோபு கூறும் பதிலுரையில், ஒரு முக்கியமான வரி இடம்பெற்றுள்ளது: "அவரேயன்றி – அதாவது, கடவுளேயன்றி - வேறு யார் இதைச் செய்வார்?" (யோபு 9:24) என்று யோபு எழுப்பும் இக்கேள்வியை, யோபு மேற்கொள்ளும் தேடலின் மையக் கருத்தாக நாம் கருதலாம் என்பது, விவிலிய ஆய்வாளர்களின் கருத்து.

வேறு யார் இதைச் செய்வார், அல்லது, செய்யக்கூடும் என்று, யோபு எழுப்பும் இக்கேள்விக்கு, யோபு, இயற்கையிலிருந்து, சமுதாயத்திலிருந்து எடுத்துக்காட்டுக்களைக் கூறியுள்ளார். இயற்கையில் எழும் மாற்றங்கள், இயற்கைச் சீற்றங்கள், இறைவனன்றி வேறு யாரால் உருவாகமுடியும் என்று யோபு கேட்பது, நம் கவனத்தை ஈர்க்கிறது:

யோபு 9: 5,7,8

இறைவன் மலைகளை அகற்றுவார்; அவை அதை அறியா; அவர் சீற்றத்தில் அவைகளைத் தலைகீழாக்குவார்... அவர் கட்டளையிடுவார்; கதிரவன் தோன்றான்; அவர் மறைத்திடுவார் விண்மீன்களை. தாமே தனியாய் வானை விரித்தவர், ஆழியின் முதுகை மிதித்து நடந்தவர்.

இயற்கையின் மீது, இவ்வளவு ஆதிக்கம் செலுத்தும் இறைவன், சமுதாயத்தில் நிகழும் கொடுமைகளுக்கும் காரணமாக இருக்கிறார் என்ற கண்ணோட்டத்தில், யோபு கூறும் வார்த்தைகள் நம்மைத் திகைக்க வைக்கின்றன, தடுமாற வைக்கின்றன.

யோபு 9: 22ஆ-24

அவர் நல்லாரையும் பொல்லாரையும் ஒருங்கே அழிக்கின்றார். பேரிடர் சாவைத் திடீரெனத் தரும்போது, அவர் மாசற்றவரின் நெருக்கடி கண்டு நகைப்பார். வையகம் கொடியோர் கையில் கொடுக்கப்படுகின்றது; அதன் நீதிபதிகளின் கண்களை அவர் கட்டுகின்றார். அவரேயன்றி வேறு யார் இதைச் செய்வார்?

இயற்கை சீற்றங்கள், சமுதாயத்தில் அநீதிகள் எழும்போது, நம் உள்ளங்களிலும் இறைவனைக் குறை கூறும் கருத்துக்கள் தோன்றுவதை மறுக்க இயலாது. நாம் வெளிப்படையாகச் சொல்வதற்குத் தயங்கி, மனதுக்குள் பூட்டி வைத்துக்கொள்ளும் வார்த்தைகளுக்கு, யோபு குரல் கொடுப்பதை போல் தெரிகிறது.

யோபின் துன்பத்தில் தங்களையே ஒன்றித்துக்கொள்ளும் பல ஆயிரம் உள்ளங்கள், தங்களை அத்துன்பங்களிலிருந்து வெளியேற்றிய இறைவனைப் புகழ்ந்துள்ளனர். நாம் இத்தேடலின் துவக்கத்தில் சொன்ன கதையின் நாயகி, அவர்களின் நம்பிக்கை சொற்களுடன் இன்றைய தேடலை நிறைவு செய்வோம்.

இளம்பெண் மிர்ரெயில் அவர்களும், தன் துன்பங்களோடு கடவுளை இணைத்துள்ளார். தன் துன்பங்களின் காரணமாக அல்ல, மாறாக, தன் துன்பங்களிலிருந்து மீட்பவராக அவர் கடவுளை இணைத்துள்ளார். தன் வாழ்வைக் குறித்து, இளம்பெண் மிர்ரெயில் அவர்கள் விவரிக்கும்போது, "நான் என் வாழ்வை, நம்பிக்கையின் கதை என்றும், கடவுளின் கதை என்றும் அழைக்க விரும்புகிறேன். சாம்பலைக் கொண்டு வரையப்பட்ட, பலவண்ண ஓவியம் என்று எண்ணிப்பார்க்க விழைகிறேன்" என்று கூறியுள்ளார்.

"பசி, துப்பாக்கி குண்டுகள், நீரில் மூழ்கும் ஆபத்து, காட்டு விலங்குகள் என்று, பல வழிகளில் என்னைத் துரத்திவந்த மரணத்திலிருந்து நான் தப்பித்தேன். எந்த ஒரு குழந்தைக்கும், ஏன், எந்த ஒரு மனிதப்பிறவிக்கும் இதுபோன்ற கொடுமைகள் நிகழவேக்கூடாது" என்று இளம்பெண் மிர்ரெயில் அவர்கள் தன் வாழ்வை விவரிக்கும்போது, யோபு தன் வாழ்வைக்குறித்து வேதனையோடு கூறும் பல வரிகள் நம் நினைவில் எழுகின்றன. வேதனை வேள்வியில் சிக்கியிருக்கும் எந்த உள்ளமும், சொல்ல நினைக்கும் வார்த்தைகள், யோபின் வாயிலிருந்து வெடித்தெழுகின்றன:

யோபு 9: 17-18

புயலினால் என்னை நொறுக்குவார்; காரணமின்றி என் காயங்களைப் பெருக்குவார். அவர் என்னை மூச்சிழுக்கவும் விடாது, கசப்பினால் என்னை நிரப்புகின்றார்.

இளம்பெண் மிர்ரெயில் அவர்கள் தன் கொடுமைகளைப் பற்றி பேசும் தருணங்கள் அனைத்திலும், கடவுளைப்பற்றி தவறாமல் குறிப்பிட்டு வருகிறார்: "நான் கடந்துவந்த வாழ்க்கையில், பலமுறை, அனைத்தையும் விட்டுவிட்டு ஓடிவிட நினைத்தேன். ஆனால், எனக்குள் ஓர் உந்துதல் எப்போதும் இருந்தது. கடவுள் என்னைக் காப்பாற்றியதற்கு காரணம் இருந்தது. என் வாழ்வின் வழியே, பலருக்கு நான் உதவிகள் செய்யவேண்டும் என்பதற்காகவே, இறைவன் என்னை, காப்பாற்றி வந்துள்ளார் என்பதை நான் அடிக்கடி உணர்ந்தேன்" என்று மிர்ரெயில் அவர்கள் தன் பகிர்வுகளில் தவறாமல் குறிப்பிட்டு வருகிறார்.

நம் தனிப்பட்ட வாழ்விலும், சமுதாய வாழ்விலும் நாம் சந்திக்கும் துன்பங்களை, சரியான கண்ணோட்டத்துடன் புரிந்துகொள்ள, யோபின் நூலில் நம் தேடலைத் தொடர்வோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.