2017-04-04 15:26:00

ஈராக் கிறிஸ்தவர்கள் ஆழமான மத நம்பிக்கை கொண்டவர்கள்


ஏப்.,04,2017. கிறிஸ்தவர்கள் மதநம்பிக்கையற்றவர்கள் என்று இஸ்லாமிய அரசு கூறிவருவது தவறு, நாங்கள் ஆழமான மத நம்பிக்கை கொண்டவர்கள் மட்டுமல்ல, பன்முக மத நம்பிக்கை கொண்ட சமுதாயத்தை ஈராக் நாட்டில் உருவாக்கவும் உழைக்கிறோம் என்று, ஈராக் நாட்டின் கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை, லூயிஸ் இரபேல் சாக்கோ அவர்கள் கூறினார்.

மோசூல் நகரின் அருகே அமைந்துள்ள புலம்பெயர்ந்தோர் முகாம்கள் இரண்டினை, இத்திங்களன்று பார்வையிட்ட முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள், அங்கு வாழ்ந்த இஸ்லாமியருக்கு நிதி உதவிகளைச் செய்தபின், செய்தியாளர்களிடம் பேசுகையில் இவ்வாறு கூறினார்.

ஈராக் கிறிஸ்தவர்களிடமிருந்து திரட்டப்பட்ட நிதியைக் கொண்டு, இம்முகாம்களில் தங்கியிருந்த 4000த்திற்கும் அதிகமான இஸ்லாமியருக்கு முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள் நிதி உதவியும், மருந்துகளும் வழங்கினார் என்று ஆசிய செய்தி கூறுகிறது.

புலம்பெயர்ந்தோர் முகாம்களில் தங்கியிருக்கும் இஸ்லாமியருக்கு, ஏனைய அனைத்து உதவிகளையும் விட, தற்போது மிக அதிக அளவில் தேவைப்படும் உதவி, அவர்கள் உள்ளத்தில் நம்பிக்கையை வளர்ப்பதே என்று கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள் வலியுறுத்திக் கூறினார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.