2017-04-03 16:08:00

தீர்ப்பிட வந்தோரே, குற்றவாளிகளாய் – திருத்தந்தையின் மறையுரை


ஏப்.,03,2017. மற்றவர்களைத் தீர்ப்பிடுவதில் ஆர்வம் கொள்ளாமல், அவர்களை மன்னிக்க ஒவ்வொருவரும் முன்வரவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மறையுரையில் அழைப்பு விடுத்தார்.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், இத்திங்கள் காலை, திருப்பலி நிறைவேற்றிய வேளையில், அந்நாளைய நற்செய்தியான, விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்பற்றிய நிகழ்வு குறித்து தன் சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டார்.

இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசிக்கப்பட்ட, சூசன்னாவை இரு நீதிபதிகள் குற்றம் சாட்டிய நிகழ்வையும், புனித யோவான் நற்செய்தியின் விபச்சாரத்தில் பிடிபட்ட பெண் பற்றிய நிகழ்வையும் குறித்து சிந்தனைகளை வழங்கியத் திருத்தந்தை, நாமனைவருமே பாவிகள்தான் என்றும், இவ்வுலகில் பாவமே புரியாமல் வாழ்ந்தவர், அன்னை மரியா மட்டுமே என்றும் கூறினார்.

குற்றமற்ற நிலை, பாவம், சட்டம் என்ற பல்வேறு கூறுகளை இவ்வாசகங்களில் காணும் நாம், தீர்ப்பிட வந்தவர்களே, குற்றவாளிகளாய் இருப்பதையும் பார்க்கிறோம் என்று கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

உள்ளத்தில் குற்றமுடையவர்களாக, சட்டங்களை உருவாக்கி, அவற்றில் இரக்கத்திற்கு இடமே இல்லாமல் செய்த பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் தீர்ப்பிட முன்வந்தபோது, இயேசுவோ, அப்பெண்ணை மன்னித்து, சட்டத்தின் நிறைவாக, தன்னை வெளிப்படுத்தினார் என்று கூறியத் திருத்தந்தை, 'நானும் தீர்ப்பு அளிக்கவில்லை. நீர் போகலாம். இனி, பாவம் செய்யாதீர்' என இயேசு கூறுவதை, நினைவில் கொள்வோம் என்று மேலும் சொன்னார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.