2017-04-03 17:30:00

கொலம்பியா, காங்கோ, வெனிசுவேலா, பராகுவாய் குறித்த கவலை


ஏப்.,03,2017. மேலும், கார்பி மேய்ப்புப்பணி பயணத்தில் நிறைவேற்றிய திருப்பலிக்குப்பின், மக்களோடு இணைந்து மூவேளை செபத்தைச் செபித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதன் இறுதியில், இன்றைய உலகின் சில துன்ப நிகழ்வுகள் குறித்த தன் கவலையையும் பகிர்ந்து கொண்டார்.

மார்ச் மாதம் 31ம் தேதி இரவில் கொலம்பியா நாட்டில் இடம்பெற்ற நிலச்சரிவில் ஏறத்தாழ 200 பேர் கொல்லப்பட்டது, காங்கோ குடியரசின் கசாய் பகுதியில், மக்களின் உயிரிழப்புகளுக்கும், குடிபெயர்தலுக்கும் காரணமான மோதல்கள், போன்றவற்றைச் சுட்டிக்காட்டி, தன் கவலையை வெளியிட்ட திருத்தந்தை, காங்கோ குடியரசின் துன்ப நிலைகளுக்கு காரணமானவர்கள், வன்முறைக்கும் பகமைக்கும் அடிமைகளாக தொடர்ந்து செயல்படாமல் இருக்குமாறு, அனைவரும் செபிப்போம் என வேண்டினார்.

வெனிசுவேலா, மற்றும், பராகுவாயில், உள்நாட்டுப் போருக்கான அடையாளங்களைக் கொண்டிருக்கும் பதட்டநிலைகள் குறித்தும் தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வன்முறைகளை கைவிட்டு, அரசியல் தீர்வுகளுக்குரிய வழிகளை, சோர்வின்றி தேடுமாறு, அந்த அன்புக்குரிய மக்களை நோக்கி தான் அழைப்பு விடுப்பதாகத் தெரிவித்தார்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.