2017-04-01 16:55:00

வெனிசுவேலாவின் நெருக்கடியைக் களைய உரையாடல் தேவை


ஏப்.,01,2017. வெனிசுவேலா நாட்டின் நெருக்கடி நிலையைத் தீர்ப்பதற்கு, கலந்துரையாடல் பெரிதும் உதவும் என்றும், அரசும், எதிர்க்கட்சிகளும் மோதல்களை விடுத்து, பேச்சு வார்த்தைகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் இயேசு சபையின் உலகத் தலைவர், அருள்பணி Arturo Sosa அவர்கள் கூறியுள்ளார்.

அகில உலக இயேசு சபையில் ஐரோப்பியர் அல்லாதவராக முதல் முறையாக, தேர்ந்தெடுக்கப்பட்ட அருள்பணி Sosa அவர்கள், கடந்த வாரம் பெரு நாட்டிற்கு பயணம் மேற்கொண்ட வேளையில், "El Comercio" என்ற செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.  

வெனிசுவேலா நாட்டவரான அருள்பணி Sosa அவர்கள், கடந்த சில மாதங்களாக தன் நாடு சந்தித்து வரும் நெருக்கடி நிலை, உரையாடல் வழியாக மட்டுமே தீர்க்கப்பட முடியும் என்று எடுத்துரைத்தார்.

OAS எனப்படும், அமெரிக்க கண்டத்தின் அரசுகள் நிறுவனம், அண்மையில், வாஷிங்டன் நகரில் கூடிய வேளையில், வெனிசுவேலா குறித்த விவாதங்கள் எழுந்தன என்றும், இந்நிறுவனத்தின் செயலர் Luis Almagro அவர்கள், குடியரசு கொள்கைகளுக்கு எதிராக வெனிசுவேலாவில் நிலவும் அரசியல் சூழல் சரியாகவில்லையெனில், அந்நாட்டை, OAS நிறுவனத்திலிருந்து நீக்கவேண்டும் என்றும் கூறினார்.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.