2017-03-31 15:35:00

கடந்தகால நினைவுகளைத் தூய்மைப்படுத்த திருத்தந்தையின் அழைப்பு


மார்ச்,31,2017. லூத்தர் கொணர்ந்த சீர்திருத்தங்களைப் பற்றி பேசுவதற்கு,  திருப்பீடம் ஏற்பாடு செய்துள்ள கருத்தரங்கில், கத்தோலிக்கரும், லூத்தரன் சபையினரும் இணைந்து வந்துள்ளது, தூய ஆவியாரின் செயலே என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னைச் சந்திக்க வந்திருந்த பிரதிநிதிகளிடம் கூறினார்.

"லூத்தர்: 500 ஆண்டுகளுக்குப் பின்னர்" என்ற தலைப்பில், திருப்பீட வரலாற்றியல் கழகம், உரோம் நகரில் ஏற்பாடு செய்துள்ள ஒரு கருத்தரங்கில் பங்கேற்க வந்திருந்த 150க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளை, மார்ச் 31, இவ்வெள்ளி காலை, திருப்பீடத்தின் கிளமெந்தினா அரங்கத்தில் சந்தித்த திருத்தந்தை, இத்தகைய இணைந்த முயற்சியை மனதாரப் பாராட்டினார்.

அண்மையக் காலம் வரை, இத்தகையதொரு சந்திப்பை எண்ணிப்பார்க்கவும் இயலாமல் இருந்த ஓர் இறுக்கமான சூழலைவிட்டு வெளியேறி, கத்தோலிக்கரும், லூத்தரன் சபையினரும், தூய ஆவியாரின் துணையோடு, பயணிக்கும் புதிய வழி, இறைவன் தந்த வரம் என்று திருத்தந்தை இச்சந்திப்பில் கூறினார்.

சீர்திருத்த இயக்கம் துவங்கிய 500ம் ஆண்டு கொண்டாட்டங்களுக்கு, லூத்தரன் சபையினரும், கத்தோலிக்கரும் இணைந்து 'மோதலிலிருந்து ஒன்றிப்புக்கு' என்ற தலைப்பை மையக்கருத்தாகத் தெரிவு செய்ததையும் திருத்தந்தை தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

கடந்தகாலத்தை மாற்றமுடியாது என்பதை அனைவரும் அறிவோம் என்று குறிப்பிட்டுப் பேசியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த 50 ஆண்டுகளாக மேகொள்ளப்பட்டு வரும் ஒன்றிப்பு முயற்சியில், நம் கடந்த கால நினைவுகளைத் தூய்மைப்படுத்த, இறைவனின் துணை நமக்குத் தேவை என்று எடுத்துரைத்தார்.

வரலாற்றின் பல சூழல்களில், பல்வேறு காரணங்களுக்காக கிறிஸ்தவ சமுதாயத்தில் உருவான பிரிவுகள் அனைத்தையும் வென்று, நாம் நம்பிக்கையின் மக்களாக இவ்வுலகிற்கு சான்று பகரவேண்டும் என்று, திருத்தந்தை, தன் உரையின் இறுதியில் வலியுறுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.