2017-03-30 14:39:00

பிறரன்புப் பணிகள் வழியாக மாற்றமும், நற்செய்தி அறிவிப்பும்


மார்ச்,30,2017. மாறிவரும் சமூக மற்றும் கலாச்சாரச் சூழல்களுக்கு ஏற்ப, நற்செய்தி அறிவிப்புப்பணியை, தங்கள் நற்செயல்கள் வழியாக ஆற்றிவரும் சொமாஸ்கி துறவுச் சபையினருக்கு தன் நன்றியை தெரிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்ட இளையோரிடையே பணியாற்றிவரும் சொமாஸ்கி துறவுசபையின் அகில உலக பொதுஅவைக் கூட்டத்தில் பங்குபெறும் அங்கத்தினர்களை, இவ்வியாழன் காலை திருப்பீடத்தில் சந்தித்து உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித ஜெரோம் எமிலியானியால் துவக்கப்பட்ட இச்சபையின் ஐந்தாம் நூற்றாண்டு கொண்டாடப்பட்டுவரும் இவ்வேளையில், பிறரன்பு பணிகள் வழியாக துறவுசபைகளுக்குள்ளும், திருஅவைக்குள்ளும், சமூகத்திலும் மாற்றங்களைக் கொணரும் இத்துறவு சபையின் முயற்சிகள் தொடரவேண்டும் என அழைப்பு விடுத்தார்.

மனித உரிமை மீறல்கள், குழந்தைகளின் பாதுகாப்பற்ற நிலை, குழந்தைகள் மற்றும் இளையோரின் உரிமை பறிப்பு, சிறார் தொழிலாளர், சுரண்டல், மனித வியாபாரம் போன்ற தீமைகளுக்கு, நற்செய்தி மதிப்பீடுகளின் உதவியுடன் தீர்வுகாண, சொமாஸ்கி துறவுசபை தொடர்ந்து முன்வரவேண்டும் எனவும் அழைப்புவிடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மார்ட்டின் லூத்தர் காலத்தில் வாழ்ந்த புனித ஜெரோம் எமிலியானி, கத்தோலிக்க ஒன்றிப்பு குறித்த கவலையுடன் வாழ்ந்தாலும், இத்தாலியில் திருஅவையின் சீரமைப்புக்கு பெரும்பங்கு ஆற்றியுள்ளார் எனவும் பாராட்டிய திருத்தந்தை, பிறரன்பு பணிகள் மீது இப்புனிதர் கொண்டிருந்த தாகம், மேய்ப்பர்களுக்கு பணிவு, சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் இரக்கம் குறித்த தியானம், மறைக்கல்வி போதனை, அருளடையாளங்களுக்கு விசுவாசமாயிருத்தல், அன்னை மரியா மீது அன்பு போன்ற அவரின் நற்குணங்கள், அனைவருக்கும் மிகப்பெரும் எடுத்துக்காட்டாக உள்ளன எனவும் கூறினார்.

ஆதரவற்ற இளையோருக்கு உதவுவதற்கென உருவாக்கப்பட்ட சொமாஸ்கி துறவுசபை, தலத்திருஅவைகளுக்கு உதவும் நோக்கத்தில், அருள்பணியாளர்கள், மறைக்கல்வி ஆசிரியர்கள், பொதுநிலையினர் ஆகியோருக்கு பயிற்சி வழங்குவதிலும், கிறிஸ்தவ ஒன்றிப்பு நடவடிக்கைகளை ஊக்குவிப்பதிலும் சிறப்புப் பணியாற்றிவருவது தொடரவேண்டும் எனவும் விண்ணப்பித்தார், திருத்தந்தை பிரான்சிஸ். 

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.