2017-03-30 14:34:00

நேபாள தவக்கால செப பேரணியில் பிற மதத்தவரும்


மார்ச்,30,2017. ஏப்ரல் 1, வரும் சனிக்கிழமையன்று, நேபாளத்தின் கத்தோலிக்கர்கள் இணைந்து மேற்கொள்ளவிருக்கும் தவக்கால செப ஊர்வலத்தில் பல நூற்றுக்கணக்கான கத்தோலிக்கரல்லாதவர்களும் கலந்துகொள்ள உள்ளதாக அறிவித்துள்ளனர்.

நேபாளத்தின்  Lamidanda என்ற இடத்தில் துவங்கி, Lakure Bhanjyang  எனுமிடத்தில் திருப்பலியுடன் நிறைவடைய உள்ள இந்த ஊர்வலத்தில் கலந்துகொள்ள, கத்தோலிக்கரல்லாதவர்களும் பெருமளவில் தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளதாக உரைத்தார், அந்நாட்டில் 30 ஆண்டுகளாக பணியாற்றும் இயேசு சபை அருள்பணியாளர் Bill Robinson.

கத்தோலிக்கரல்லாத பலரின் வீடுகளில் இயேசுவின் படம் மாட்டப்பட்டிருப்பதையும், மக்களின் கழுத்தில் செபமாலை தொங்குவதையும் தான் கண்டுள்ளதாகவும் கூறிய வெளிநாட்டு அருள்பணியாளர் ராபின்சன் அவர்கள், நேபாளத்தில், பலர், திருமுழுக்கு பெறாமலேயே, கிறிஸ்துவின் மதிப்பீடுகளின்படி வாழ்ந்து வருவதாக மேலும் உரைத்தார்.

நேபாளத்தின் ஏழை மக்களிடையே, சமூகப்பணியிலும், கல்விப்பணியிலும் ஈடுபடும் பல இளையோர் குழுக்கள், இதே துறையில் ஆர்வமுடன் பணியாற்றும் கத்தோலிக்க குழுக்களால் கவரப்பட்டு, இந்த தவக்கால செப ஊர்வலத்தில் ஒவ்வோர் ஆண்டும் கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கத்தோலிக்க அருள்பணியாளர்களின் வழிகாட்டுதலாலும் தாங்கள் கவரப்பாட்டுள்ளதாக, நேபாளத்தின் பிற மத இளையோர் பலர் தெரிவித்துள்ளனர்.

ஆதாரம் :  AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.