2017-03-30 14:27:00

நாம் விலகிச்சென்றாலும், நம்மைவிட்டு விலகாத இறைவன்


மார்ச்,30,2017. இறைவனை விட்டு விலகி, பொய் தெய்வங்களையும், கற்பனைகளையும் நாம் துரத்திச் சென்றாலும், இறைவன், நல்ல தந்தையைப்போல் நமக்காகக் காத்திருக்கிறார் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழன் காலை வழங்கிய மறையுரையில் கூறினார்.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றியத் திருத்தந்தை, இறைவனை விட்டு விலகிச்சென்ற இஸ்ரயேல் மக்களைப்பற்றி, விடுதலைப் பயண நூலிலிருந்து வாசிக்கப்பட்ட பகுதியை, தன் மறையுரையின் மையமாக்கினார்.

மோசே இறைவனைச் சந்திக்கச் சென்ற 40 நாள்களில், இஸ்ரயேல் மக்கள் பொறுமை இழந்து, தங்களுக்கென ஒரு தங்கக்கன்றை உருவாக்கி, வழிபட ஆரம்பித்தனர் என்று தன் மறையுரையில் குறிப்பிட்டத் திருத்தந்தை, பொறுமை இழக்கும்போது, இறைவனையும் இழந்துவிடும் ஆபத்து உண்டு என்று குறிப்பிட்டார்.

மாயக்கனவுகளைத் துரத்திச் செல்லும் நாம், வெகு எளிதாக இறைவனிடம் காட்டவேண்டிய பற்றுறுதியை இழந்துவிடுகிறோம் என்று கூறியத் திருத்தந்தை, நமது நடத்தையால் ஏமாற்றம் அடையும் இறைவன், நம்மீது கொண்டுள்ள பற்றுறுதியை இழப்பதில்லை என்று எடுத்துரைத்தார்.

இறைவன் நம்மைக் குறித்து ஏமாற்றம் அடைந்துள்ளாரா என்பதை ஆய்வு செய்ய தவக்காலம் தகுதியான நேரம் என்று தன் மறையுரையின் இறுதியில் கூறினார் திருத்தந்தை. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.