2017-03-29 15:30:00

சாம்பலில் பூத்த சரித்திரம் : திருத்தூதர்கள் காலம் பாகம் 10


மார்ச்,29,2017.  புனித தோமா, புனித தோமையார், புனித தாமஸ் எனப்படுபவர், இயேசுவின் பன்னிரு திருத்தூதர்களில் ஒருவர். இவர், அக்காலத்தில், உரோமைப் பேரரசின்கீழ் இருந்த கலிலேயாவில் பிறந்தவர். தாமஸ் என்பதற்கு கிரேக்க மொழியில் திதிம் என்று பொருள். திதிம் என்றால் இரட்டைப் பிள்ளைகள் என்று அர்த்தம். திருத்தூதர் தோமா, நற்செய்தியில், திதிம் என தோமா எனக் குறிப்பிடப்படுகிறார். இவர், மிகவும் துணிச்சல் மிக்கவர் மற்றும் தன்னையே தியாகம் செய்வதிலும் சிறந்தவர். திருத்தூதர் தோமாவின் பெயர் நான்கு நற்செய்தி நூல்களிலும் இடம்பெற்றிருந்தாலும், யோவான் நற்செய்தி நூலில் இவர் பற்றிச் சொல்லப்பட்டுள்ள குறிப்புகள் இவரது ஆளுமையை மிகத் தெளிவாகக் காட்டுகின்றன. அன்று இயேசு தம் நண்பரான இலாசர் நோயுற்றிருந்ததைக் கேள்விப்பட்ட பிறகு, தாம் இருந்த இடத்தில் இன்னும் இரண்டு நாள் தங்கியிருந்தார். பின்னர் தம் சீடரிடம், “மீண்டும் யூதேயாவுக்குப் போவோம், வாருங்கள்”என்று கூறினார். ஆனால், சீடர்கள் இயேசுவிடம், “ரபி, இப்போது தானே யூதர்கள் உம்மேல் கல்லெறிய முயன்றார்கள்; மீண்டும் அங்குப் போகிறீரா?” என்று கேட்டார்கள். அங்குச் செல்வதன் காரணத்தை இயேசு, அவர்களுக்கு விளக்கினார். அதன் பின்னர், திதிம் என்னும் தோமா, தம் உடன் சீடரிடம், “நாமும் செல்வோம், அவரோடு இறப்போம்” என்றார்(யோவா.11,16). தோமா, ஆண்டவரிடம் தனிப்பற்று கொண்டிருந்தார் என்பதையே இது காட்டுகிறது. 

திருத்தூதர் தோமாவை, பொதுவாக, சந்தேகத் தோமா (Doubting Thomas) எனச் சொல்லும் பழக்கம் உள்ளது. இயேசு உயிர்த்து விட்டார் என மற்ற திருத்தூதர்கள் சொன்னதை, தோமா முதலில் நம்ப மறுத்ததே இதற்குக் காரணம். உயிர்த்த இயேசு தம் சீடர்களுக்குத் தோன்றிய போது தோமா அந்த இடத்தில் இல்லை. இக்காட்சி முடிந்தபின், அங்கு வந்த தோமாவிடம், மற்றச் சீடர்கள் ஆண்டவரைக் கண்டோம் என்றார்கள். ஆனால், தோமா, இயேசுவின் உயிர்ப்பை நம்பாமல், அவர்களிடம், “இயேசுவின் கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன்”(யோவா.20,25) என்றார். இது நடந்து எட்டு நாள்களுக்குப்பின், இயேசுவின் சீடர்கள் மீண்டும் கூடியிருந்த வேளையில், தோமாவும் அவர்களோடு இருந்தார். சீடர்கள் கூடியிருந்த கதவுகள் பூட்டப்பட்டிருந்தும் இயேசு உள்ளே வந்து அவர்கள் நடுவில் நின்று, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக!” என்று வாழ்த்தினார். பின்னர் அவர் தோமாவிடம், “இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கைகொள்”என்றார். தோமா அவரைப் பார்த்து, “நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்! (யோவான் 20:28)” என்றார். இயேசு அவரிடம், “நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்” என்றார். 

எதற்கெடுத்தாலும் சந்தேகப்படுபவர்களை, தோமையார் பரம்பரை என்று கேலி செய்யும் பழக்கம் நம்மிடையே உள்ளது. ஆனால், தோமா, இயேசுவை, நீரே என் ஆண்டவர், நீரே என் கடவுள்" என்று விசுவாச அறிக்கை கூறியது போல வேறு யாரும் அவ்வளவு மனம் விட்டு அறிக்கையிடவில்லை. இதன் மூலம், தோமா, நமக்கு ஓர் உருக்கமான, விசுவாசம் நிறைந்த செபத்தை அமைத்து கொடுத்திருக்கிறார். தோமா கூறிய இந்த விசுவாச அறிக்கையை, நாம் பொருள் உணர்ந்து செபிக்கும்போதெல்லாம் நமது விசுவாசம் ஆழப்படுகின்றது. "காணாமல் நம்புவோர் பேறுபெற்றோர்" என்று தோமாவிடம் கூறிய உயிர்த்த ஆண்டவர், தம்மில் விசுவாசம் கொள்வோர், உலகமுடியும் வரை பேறு பெற்றோர் என்பதை தெளிவுபடுத்துகிறார்.  

ஆண்டவரின் விண்ணேற்புக்குப் பிறகு, அவரின் கட்டளைப்படி, திருத்தூதர்கள் உலகின் பல இடங்களுக்கும் சென்று நற்செய்தி அறிவித்து, இயேசுவுக்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்தனர். அப்போது நடந்ததாக ஒரு கதை சொல்லப்படுகிறது. யார் எங்கு நற்செய்தி அறிவிக்கச் செல்வது என, திருத்தூதர்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாம். அப்போது சீட்டுக் குலுக்கிப் பார்த்ததில், தோமாவுக்கு இந்தியா வந்ததாம். ஆனால், இவரோ, தன்னால் இந்தியா செல்ல முடியாது என, தன் இயலாமையை விளக்கினாராம். அவ்வேளையில், இயேசு, ஓர் இந்திய அரசரான Gundafor என்பவரின் பிரதிநிதி Abban என்பவருக்குத் தோன்றி, தோமாவை அவரிடம் அடிமையாக விற்றாராம். தோமாவும், Gundaforவிடம் தச்சுத்தொழிலாளியாக வேலை செய்தாராம். ஒருசமயம், Abbanம், தோமாவும், அந்த்ராபோலிசுக்கு கப்பல் பயணம் செய்தனர். அங்கே ஆட்சியாளர் மகளுக்குத் திருமணம் நடந்ததாம். அவர்கள் இருவரும் அத்திருமணத்தில் கலந்துகொண்டார்களாம். அவ்வேளையில், தோமாவுக்கு இயேசு காட்சியில் தோன்றிக் கூறியதன்படி, அந்த மணப்பெண்ணின் திருமணத்தை நிறுத்தி, அப்பெண் கன்னியாகவே வாழச் செய்தாராம்.

பின்னர் தோமா இந்தியா சென்றார். அங்கே, Gundafor அரசருக்கு மாளிகை கட்ட வேண்டிய பொறுப்பு தோமாவுக்குக் கொடுக்கப்பட்டது. ஆனால், தோமா மாளிகை கட்டுவதற்கென கொடுக்கப்பட்ட பணத்தை ஏழைகளுக்குக் கொடுத்தார். அதனால் அரசர் Gundafor, தோமாவைக் கைது செய்து சிறையில் அடைத்தார். ஆயினும் தோமா அற்புதமாய் தப்பித்தார். இதனால் அரசர் Gundafor மனந்திரும்பினார். பின்னர், இந்தியாவில் தோமா நற்செய்தி அறிவித்தபோது, டிராகன் மற்றும், கொடிய காட்டுக் கழுதைகளிடமிருந்து கடினமான சூழல்களைச் சந்தித்தார். பின்னர், அரசர் Misdai ஆட்சி செய்த நகரத்திற்குச் சென்று, அவரது மனைவி Tertia, மகன் Vazan ஆகிய இருவரையும் மனமாற்றினார் தோமா. இதனால் திருத்தூதர் தோமாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. நகரின் குன்றுக்கு இவர் அழைத்துச் செல்லப்பட்டு, நான்கு படைவீரர்களால் ஈட்டியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். பழங்கால அரசர்களின் கல்லறைகளில் இவர் அடக்கம் செய்யப்பட்டார். இமாலயாவிற்கு தெற்கே, ஆசியாவின் ஒரு பகுதியாக இருந்த, தற்போதைய ஆப்கானிஸ்தான், பலுசிஸ்தான், பஞ்சாப், சிந்து ஆகிய பகுதிகளின் அரசராக, கி.பி.46ம் ஆண்டில், இந்தப் பெயரில் அரசர் ஒருவர் ஆட்சி செய்தார் என்பதற்கு வரலாற்று சான்றுகள் உள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.