2017-03-29 16:23:00

ஐரோப்பாவின் அமைதிக்கு அச்சுறுத்தல், தீவிரவாதம் மட்டுமல்ல


மார்ச்,29,2017. ஐரோப்பிய கண்டத்தின் அமைதிக்கு அச்சுறுத்தலாக இருப்பது, தீவிரவாதம் மட்டுமல்ல, ஏனைய காரணங்களும் உள்ளன என்று, வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர், இத்தாலிய காரித்தாஸ் ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டத்தில் உரையாற்றினார்.

மார்ச் 27 முதல் 30 முடிய, தராந்தோ (Taranto) எனுமிடத்தில், இத்தாலிய காரித்தாஸ் அமைப்பு நடத்திவரும் 39வது கூட்டத்தில், ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத்திற்கென செயலாற்றிவரும் திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள் பேசுகையில் இவ்வாறு கூறினார்.

உலகில் அடுத்து நிகழக்கூடிய ஒரு மோதல், தண்ணீரை மையப்படுத்தி இருக்கக்கூடும் என்று, தன் உரையில் எச்சரிக்கை விடுத்த கர்தினால் டர்க்சன் அவர்கள், தண்ணீர், மனிதர்களின் அடிப்படை உரிமை என்ற நிலை மாறி, அதை ஒரு விற்பனைப் பொருளாக மாற்றும் போக்கு அதிகரித்து வருவதால், மோதல்கள் உருவாகும் ஆபத்தும் அதிகரித்துள்ளது என்று கூறினார்.

இத்தாலிய காரித்தாஸ் அமைப்பின் தலைவராகப் பணியாற்றும் கர்தினால் பிரான்செஸ்கோ மோந்தெநெக்ரோ அவர்கள், இக்கருத்தரங்கை துவக்கிவைத்து பேசுகையில், ஐரோப்பாவின் பல நாடுகளைத் தேடிவரும் புலம்பெயர்ந்தோர், நம் மனிதாபிமானத்தின் அளவைக் கணக்கிடும் வெப்பமானி என்று குறிப்பிட்டார்.

ஐரோப்பிய ஒன்றியம் உருவாக வழிவகுத்த உரோம் ஒப்பந்தத்தின் 60ம் ஆண்டு சிறப்பிக்கப்படும் இவ்வாண்டில், நாடுகள் தங்கள் எல்லைகளைக் காப்பதற்கு பெருமளவு நிதியை ஒதுக்குவது, பெரும் எதிர்மறை அடையாளமாக உள்ளது என்று, கர்தினால் மோந்தெநெக்ரோ அவர்கள், தன் துவக்க உரையில் கூறினார்.

இத்தாலிய காரித்தாஸ் அமைப்பு ஏற்பாடு செய்துள்ள இக்கருத்தரங்கில், 155 மறைமாவட்டங்களைச் சேர்ந்த 500க்கும் அதிகமான பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர் என்று, வத்திக்கான் நாளிதழ் L'Osservatore Romano கூறியுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.