2017-03-28 15:39:00

சார்பு நிலையை உருவாக்காமல், தன்னிறைவு நிலையை ஊக்குவிப்போம்


மார்ச்,28,2017. இன்றைய உலகின் நிலைகளை உற்றுக் கவனிக்கும் ஒவ்வொருவரும், வேளாண்மைக்கு ஆதரவளிக்க வேண்டிய அவசியத்தை உணர்வர் என, செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார், திருப்பீடச் செயலர், கர்தினால் பியேத்ரோ பரோலின்.

இச்செவ்வாயன்று Bruxellesல் இடம்பெற்ற, 'வேளாண்மையின் வருங்காலம்' குறித்த அனைத்துலகக் கருத்தரங்கிற்குச் செய்தி அனுப்பியுள்ள கர்தினால் பரோலின் அவர்கள், மனிதனின் நலனையும் ஊட்டச்சத்தையும் மையமாக வைத்து, வேளாண்மை உற்பத்தி குறித்த அர்ப்பணம் இடம்பெற வேண்டும் என அதில் அழைப்பு விடுத்துள்ளார்.

தட்ப வெப்ப நிலை மாற்றங்களாலும், இயற்கை சீற்றங்களாலும், மக்கள் தங்கள் சொந்த நிலங்களை விட்டு வெளியேறுவதாலும், உணவு உற்பத்தி பல நாடுகளில் பாதிப்பைக் கண்டு வருகிறது என உரைக்கும் கர்தினால் பரோலின் அவர்களின் செய்தி, ஏழை நாடுகள், தொடர்ந்து மற்றவர்களை சார்ந்து வாழவேண்டிய நிலையை உருவாக்காமல், அவரவர் தன்னிறைவுப் பெற்றவர்களாக வாழ உதவவேண்டும் எனவும் விண்ணப்பிக்கிறது.

வேளாண்துறையில் இடம்பெறும் வளர்ச்சித் திட்டங்கள் அனைத்தும், மேலும் அது குறித்த பொறுப்புணர்வுகளுக்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையையும் தன் செய்தியில் வெளிப்படுத்தியுள்ளார், கர்தினால் பரோலின்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.