2017-03-27 16:35:00

திருத்தந்தை : உண்மை ஒளியைப் பெற்றவர்களாகச் செயல்படுவோம்


மார்ச்,27,2017. இறைவன் வழங்கும் புதிய மதிப்பீடுகளின் உதவியுடன் நாம் ஒவ்வொருவரும் மற்றவர்களைக் கணிக்க முன்வரவேண்டுமேயொழிய, முற்சார்பு எண்ணங்களுடன் அல்ல, என அழைப்பு விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

பிறவியில் பார்வையிழந்த ஒருவருக்கு இயேசு பார்வையளித்தது பற்றிய இஞ்ஞாயிறு வாசகம் குறித்து தன் மூவேளை செப உரையில் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மற்றவர்கள் குறித்த நம் முற்சார்பு எண்ணங்களாலும்,  நம் சுயநலப்போக்குகளாலும்  தவறான பாதையில் நடப்பதை விடுத்து, நம் திருமுழுக்கு வழங்கியுள்ள ஒளியின் பாதையில் நடப்போம் என அழைப்பு விடுத்தார்.

தன் உமிழ் நீரால் சேறுண்டாக்கி, அதை பார்வையற்றவரின் கண்களில் பூசி, பின்னர் சிலோவாம் குளத்தில்போய் கழுவச் சொன்ன இயேசு, இத்தகைய செயல்கள் வழியாக தன்னை உலகின் ஒளி என வெளிப்படுத்துகிறார் என்றார் திருத்தந்தை.

பார்வை பெற்ற மனிதர், இயேசுவின் மறையுண்மையை புரிந்துகொண்டதுபோல், நாம் அக ஒளி எனும் பார்வை பெறவேண்டும் என கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாமும் பார்வையிழந்த மனிதரைப்போல், நம் பாவத்தால் அக ஒளியிழந்து வாழும் வேளை, நம் கண்கள் திறக்கப்பட்டு, புது ஒளி கிட்டுவதற்கான தேவையை உணர வேண்டும் என்றார்.

நம் திருமுழுக்கு வழியாக இயேசுவினால் ஒளிர்விக்கப்பட்ட நாம், ஒளியின் மக்களுக்குரிய நடத்தைகளைக் கொண்டவர்களாக, தடுமாறாமல் செயல்படமுடியும் எனவும் கூறினார் திருத்தந்தை.

மற்றவர்கள் குறித்த தவறான முற்சார்பு எண்ணங்களைக் கைவிட்டு, உண்மையான ஒளியின் மக்களாக நாம் மாறும்போதுதான், மற்றவர்களைத் தீர்ப்பிடாமலும், இருளில் நடப்பவர்களாகச் செயல்படாமலும் இருப்போம் எனவும் தன் மூவேளை செப உரையில் எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

தன்னலம் எனும் பொய்யான ஒளியிலிருந்து நாம் விடுதலை பெற வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார், திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.