2017-03-24 15:44:00

திருஅவைக்கு ஐரோப்பா மிகவும் தேவைப்படுகின்றது


மார்ச்,24,2017. ஐரோப்பிய பொருளாதார சமுதாயத்தின் ஒப்பந்தம் உரோம் நகரில் கையெழுத்திடப்பட்டதன் 60ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, இவ்வியாழன் மாலையில், உரோம் நகரின் Santa Maria sopra Minerva என்ற ஆலயத்தில் நன்றித் திருப்பலி நிறைவேற்றினார், ஐரோப்பிய திருஅவை அதிகாரி ஒருவர்.

ஐரோப்பிய ஆயர்கள் பேரவை கூட்டமைப்பின் (CCEE)  தலைவரும், இத்தாலிய ஆயர் பேரவை (CEI) தலைவருமான கர்தினால் ஆஞ்சலோ பஞ்ஞாஸ்கோ அவர்கள், இத்திருப்பலியை நிறைவேற்றி மறையுரையாற்றுகையில், திருஅவைக்கு ஐரோப்பா மிகவும் தேவைப்படுகின்றது என்றும், இக்கண்டத்திலுள்ள நாடுகள், ஐரோப்பிய ஒன்றியத்தை மிகுந்த கவனத்துடனும், அக்கறையுடனும் நோக்குகின்றன என்றும் கூறினார்.

மத்திய இலண்டன் பகுதியில் நடைபெற்றுள்ள வன்முறைத் தாக்குதல்கள் மற்றும்,  அண்மை ஆண்டுகளில், ஏனைய நாடுகளில், வன்முறைகளில் பலியானவர்களுக்காகச் செபித்த கர்தினால் பஞ்ஞாஸ்கோ அவர்கள், பாதுகாப்பு, அமைதி, பலனுள்ள பரிமாற்றங்கள் ஆகிய ஐரோப்பிய பாரம்பரியங்கள் தொடர்ந்து காக்கப்படுமாறு கேட்டுக்கொண்டார்.

ஐரோப்பிய நாடுகளும், நிறுவனங்களும், தலைவர்களும், அமைதியின் இளவரசராம் கிறிஸ்துவிடமிருந்து ஒளியும் வலிமையும் பெற வேண்டுமென்று செபித்த கர்தினால் பஞ்ஞாஸ்கோ அவர்கள், ஐரோப்பா நற்செய்தியில் உயிரூட்டம் பெறுமாறும் வலியுறுத்தினார்.

ஐரோப்பிய பொருளாதார சமுதாயத்தின் ஒப்பந்தம், 1957ம் ஆண்டு மார்ச் 25ம் தேதி, உரோம் நகரில் கையெழுத்திடப்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.