2017-03-24 15:53:00

காசநோய் வறியோரை மிகக் கடினமாகத் தாக்குகிறது


மார்ச்,24,2017. காசநோய் உலகில் உள்ள வறியோரை மிகக் கடினமாகத் தாக்குகிறது என்றும், இந்நோயுடன் தொடர்புள்ள அனைத்து புறக்கணிப்பு பழக்கங்களையும் நீக்க உலக நலவாழ்வு நிறுவனம் உறுதி பூண்டுள்ளது என்றும் WHO எனப்படும் நலவாழ்வு நிறுவனத்தின் இயக்குனர், மார்கரெட் சான் அவர்கள் கூறினார்.

உலக காசநோய் விழிப்புணர்வு நாள், இவ்வெள்ளியன்று கடைப்பிடிக்கப்பட்டதையொட்டி, உலக நலவாழ்வு நிறுவனம், இப்புதனன்று அறிக்கை வெளியிட்ட வேளையில், இந்நிறுவனத்தின் இயக்குனர் இவ்வாறு கூறினார்.

"ஒருங்கிணைந்த முயற்சிகளில் யாரும் விடுபடக் கூடாது" என்ற விருதுவாக்குடன், உலக நலவாழ்வு நிறுவனம் இவ்வறிக்கையை வெளியிட்டுள்ளது.  

இந்நோயினால் ஒவ்வொரு நாளும் 5000 பேர் உயிரிழக்கின்றனர் என்று கூறும் இவ்வறிக்கை, வறுமையும், அதன் தொடர்ச்சியாக வரும் குறைவான ஊட்டச்சத்து, தரக்குறைவான தங்குமிடம், நலக்குறைவானச் சூழல் என்ற பல்வேறு காரணிகளைச் சுட்டிக்காட்டுகிறது.

கூடுதலாக, வறியோரிடம் காணப்படும் புகைப்பிடித்தல், மது அருந்துதல், புகையிலை பயன்பாடு போன்ற பழக்கங்களும் இந்நோயின் தாக்கத்தைக் கூட்டுகின்றன என்று WHO அறிக்கை எடுத்துரைக்கிறது.

மேலும், இந்தியாவில், ஒவ்வோர் ஆண்டும், 22 இலட்சம் பேர், காச நோயால், புதிதாகத் தாக்கப்படுகின்றனர். இந்நோயால், ஆண்டுக்கு 2 இலட்சத்து 20 ஆயிரம் பேர் இறக்கின்றனர் என, மதுரை அரசு மருத்துவக் கல்லூரி நுரையீரல் மருத்துவப் பிரிவு மருத்துவர் ஆர்.பிரபாகரன் அவர்கள் கூறினார்.

முடி, நகத்தைத் தவிர நாக்கு, காது, கண், பல், இதயம், உள்ளிட்ட உடலின் எல்லா உறுப்புகளிலும் காசநோய் ஏற்படுகின்றது.

1882ம் ஆண்டு மார்ச் 24ம் தேதியன்று, மருத்துவர் Robert Koch அவர்கள், Mycobacterium tuberculosis என்ற நோய்க் கிருமியே, காச நோய்க்குக் காரணம் என்று கண்டுபிடித்து வெளியிட்டார். இந்த நாளே, ஒவ்வோர் ஆண்டும், உலக காசநோய் நாளாகக் கடைப்பிடிக்கப்படுகின்றது.

ஆதாரம் : UN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.