2017-03-24 15:39:00

அன்புச் செயல்களுடன் கடைப்பிடிக்கப்படும் நோன்பு பயனுள்ளது


மார்ச்,24,2017. "நமக்கு அடுத்திருப்பவர்களிடம், குறிப்பாக, இன்னல்களில் இருப்பவர்களிடம், நம் அன்பை தெளிவான செயல்களால் வெளிப்படுத்தி கடைப்பிடிக்கப்படும் நோன்பே பயனுள்ளதாகும்"; “தங்களின் விசுவாசத்திற்காக அடக்குமுறைகளால் துன்புறும் நம் கிறிஸ்தவ சகோதர சகோதரிகளை நினைவுகூர்வோம். அவர்களோடு ஒன்றிணைந்திருப்போம்” என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்திகளாக, இவ்வெள்ளியன்று வெளியிடப்பட்டன.                   

மேலும், மார்ச் 25, இச்சனிக்கிழமை, மிலான் நகருக்கு ஒருநாள் மேய்ப்புப்பணி பயணத்தை மேற்கொள்கிறார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தையின் இப்பயணத்தை முன்னிட்டு, சில முக்கியமான இத்தாலியப் புனிதர்கள் பற்றிய 44 கலைவேலைப்பாடுகள் கொண்ட அருங்காட்சியகம், முதன் முறையாக, மிலான் நகரின் Reale மாளிகையில், இச்சனிக்கிழமையன்று, பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில், Lazio மாநிலத்தில், இடம்பெற்ற நிலநடுக்கத்திற்குப் பின்னர், Accumoli கிராமத்திலுள்ள, அசிசி நகர் புனித பிரான்சிஸ் ஆலயத்திலிருந்து எடுக்கப்பட்ட, அப்புனிதர் பரவச நிலையில் உள்ள ஓவியம் உட்பட, பொது மக்கள் மிகவும் பக்தியுடன் போற்றும் புனிதர்கள் பற்றிய விவரங்களும், இந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும்.

இந்த அருங்காட்சியத்தின் முதல் பகுதியில், புனிதர்களான அசிசி நகர் பிரான்சிஸ், சியன்னா நகர் கத்ரீன் ஆகிய இருவர் பற்றிய கலைப்பொருள்கள் இடம்பெற்றிருக்கும்.

இரண்டாவது பகுதியில், உரோம் பாதுகாவலர்களான புனிதர்கள் பேதுரு, பவுல், மிலான்   பாதுகாவலர்களான புனிதர்கள் அம்புரோஸ், சார்லஸ் பொரோமேயோ போன்றோர் பற்றிய கலைப்பொருள்கள் வைக்கப்பட்டிருக்கும். இந்த அருங்காட்சியகம், வருகிற ஜூன் 4ம் தேதி வரை வைக்கப்பட்டிருக்கும். 

இன்னும், EU என்ற ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த நாடுகள் மற்றும், அரசுகளின் 27 தலைவர்களை, இவ்வெள்ளி மாலை ஆறு மணிக்கு, திருப்பீடத்தின் Regia அறையில், சந்திக்கிறார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஐரோப்பிய ஒன்றியம் உருவாக அடிப்படையாக விளங்கிய, ஐரோப்பிய பொருளாதார சமுதாயத்தின் ஒப்பந்தம், உரோம் நகரில் கையெழுத்திடப்பட்டதன் 60ம் ஆண்டு நிறைவையொட்டி, உரோம் நகருக்கு வருகை தரும் ஐரோப்பிய அரசுத் தலைவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, மார்ச் 24ம் தேதி திருப்பீடத்தில் சந்திக்கின்றனர்.

ஆதாரம் : ANSA /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.