2017-03-23 16:37:00

இயேசுவின் புனிதக் கல்லறை, திருஅவை வாழ்வின் கருவறை


மார்ச்,23,2017. இயேசுவின் புனிதக் கல்லறை, திருஅவையின் வாழ்வை வழங்கிய கருவறையாக அமைந்ததோடு, அனைத்துலக மக்களுக்கும் ஒளிவழங்கும் ஊற்றாக அமைந்துள்ளது என்று கீழை வழிபாட்டு முறை திருப்பீடப் பேராயத்தின் தலைவர், கர்தினால் லியோனார்தோ சாந்திரி அவர்கள், வாழ்த்துச் செய்தி ஒன்றில் கூறியுள்ளார்.

எருசலேமின் புனிதக் கல்லறை பசிலிக்காவில் அமைந்துள்ள இயேசுவின் கல்லறை புதுப்பிக்கப்பட்டு, மார்ச் 22, இப்புதனன்று, அங்கு நடைபெற்ற கிறிஸ்தவ ஒன்றிப்பு அர்ச்சிப்பு வழிபாட்டிற்கு, கர்தினால் சாந்திரி அவர்கள் தன் வாழ்த்துச் செய்தியை அனுப்பியிருந்தார்.

பல்வேறு கிறிஸ்தவ சபைகளும், திருஅவையும் இணைந்து, இந்த புனித கருவூலத்தைக் காத்து வருவதற்காக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் இணைந்து, தானும் நன்றியையும், வாழ்த்தையும் தெரிவிப்பதாக கர்தினால் சாந்திரி அவர்களின் செய்தி கூறியது.

கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சபையின் தலைமையில், ஆர்மீனிய சபை, மற்றும் கத்தோலிக்கத் திருஅவை அனைத்தும் இணைந்து, 2016ம் ஆண்டு மார்ச் 22ம் தேதியன்று துவங்கிய புதுப்பித்தல் பணி, மிகச் சரியாக தன் முதலாண்டு நிறைவு நாளன்று முடிக்கப்பட்டுள்ளது கண்டு தான் மகிழ்வதாக கர்தினால் சாந்திரி அவர்கள் கூறியுள்ளார்.

நம்மிடையே விளங்கும் நம்பிக்கைக்கு மட்டுமல்லாமல், நமது உடன்பிறந்த உணர்வு, உரையாடல் ஆகிய பண்புகளுக்கும் இந்தப் புனிதக் கல்லறை சான்றாக விளங்குகிறது என்று கர்தினால் சாந்திரி அவர்கள் தன் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.