2017-03-22 15:53:00

திருத்தந்தையின் புதன் மறைக்கல்வியுரை - மனவுறுதியும் ஊக்கமும்


மார்ச்,22,2017. உரோம் நகரில் குளிரின் தாக்கம் ஓரளவு நிறைவுக்கு வந்து, இதமான வெப்பம் நிலவிக்கொண்டிருக்க, திருத்தந்தையின் இப்புதன் மறைக்கல்வி உரை, தூய பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்திலேயே இடம்பெற்றது. 'வலுவற்றவர்களின் குறைபாடுகளை தாங்கிக்கொண்டு, அடுத்தவரின் நன்மைக்காகவும் வளர்ச்சிக்காகவும் செயல்படுங்கள்..........., மறைநூல் தரும் மன உறுதியினாலும் ஊக்கத்தினாலும் நமக்கு எதிர்நோக்கு உண்டாகிறது' என, தூய பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்தின் 15ம் பிரிவின் முதல் பாகத்தில் காணப்படும் திருச்சொற்கள் முதலில் வாசிக்கப்பட, அதையே மையமாக வைத்து, தன் மறைக்கல்வி  உரையை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அன்புச் சகோதர சகோதரிகளே! கிறிஸ்தவ நம்பிக்கை மற்றும் எதிர்நோக்கு குறித்த நம் தொடர் மறைக்கல்வி உரையில், இன்று, தூய பவுல் கூறும், ‘மன உறுதி’, ‘ஊக்கம்’ எனும் இரு வார்த்தைகள் குறித்து நோக்குவோம். இவ்விரு வார்த்தைகளும், விவிலியம் நமக்குத் தரும் செய்தியில் அடங்கியுள்ளன எனக் கூறும் தூய பவுல் அவர்கள், நம் கடவுள், உறுதி மற்றும் ஊக்கத்தின் இறைவன் எனவும் உரைக்கிறார். கிறிஸ்தவ வாழ்வில் நாமனைவரும், நம்பிக்கையை பரப்புபவர்களாக இருப்பதுடன், ஒருவருக்கொருவர் ஊக்கமளிப்பவர்களாக, குறிப்பாக, தடுமாறி விழும் ஆபத்திலிருக்கும் மக்களுக்கு ஊக்கமளிப்பவர்களாகச் செயல்பட அழைக்கப்பட்டுள்ளோம். ஆனால், அதேவேளை, இப்பணியை, இறைவன் வழங்கும் ஆற்றலுடன் எடுத்து நடத்துகிறோம். நம் ஆண்டவர், நம்பிக்கையின் தவறாத ஆதாரம்.

இன்று, இந்த மறைக்கல்வி உரைக்கு முன்னர் வாசிக்கப்பட்ட தூய பவுலின் வரிகளுக்கு ஏற்ற வகையில், இயேசு கிறிஸ்துவுக்கு இயைந்தவர்களாக, நம் சகோதர சகோதரிகளுடன் ஒரே மனத்தினராக எப்போதும் வாழ்வோமாக.

இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருப்பீடத்தில் இடம்பெறும், தண்ணீர் குறித்த கருத்தரங்கில் பங்குபெறுவோருக்கு தன் வாழ்த்துக்களையும் வெளியிட்டார். 25 ஆண்டுகளுக்கு முன்னர் ஐ.நா.வால் உருவாக்கப்பட்டடு, ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடப்படும் உலக தண்ணீர் தினம் இப்புதனன்று சிறப்பிக்கப்பட்டதையும், செவ்வாயன்று உலக வன நாள் சிறப்பிக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, உலக வளங்களைக் காப்பதில் எடுக்கப்பட்டுவரும் ஒன்றிணைந்த நடவடிக்கைகளுக்கு தன் பாராட்டுக்களையும் வெளியிட்டார்.

மேலும், இவ்வியாழன், வெள்ளி தினங்களில் (மார்ச் 23, 24) ஒப்புரவு அருளடையாளத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் நோக்கில், 'இறைவனுடன் 24 மணி நேரங்கள்' என மேற்கொள்ளப்படும் பக்தி முயற்சிகள், அனைவரும் இறைவனின் இரக்கம் நோக்கி வரவேற்கப்படவும், மன்னிப்பைப் பெறவும் ஊக்கமளிப்பதாக அமையட்டும் எனவும் விண்ணப்பித்தார் திருத்தந்தை.

தன் மறைக்கல்வி உரையின் இறுதியில், குடிபெயர்ந்தோர் மற்றும் புலம்பெயர்ந்தோர் குறித்த அக்கறைக்கும் அழைப்பு விடுத்தார் திருத்தந்தை. இரண்டாம் உலகப் போருக்குப்பின், இதுவே மிகப்பெரிய மனிதகுல நெருக்கடியாக உள்ளது என்பதையும் எடுத்தியம்பி, குடிபெயர்ந்தோர் மற்றும் புலம்பெயர்ந்தோரின் உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்களை வரவேற்கவும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ். பின்னர் அனைவருக்கும், தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.