2017-03-22 15:38:00

சாம்பலில் பூத்த சரித்திரம் – திருத்தூதர்கள் காலம் பாகம் 9


மார்ச்,22,2017. புனித யோவான், இயேசுவின் பன்னிரு திருத்தூதர்களில் ஒருவர். இயேசுவின் அன்புச் சீடர். வயதில் இளையவர். யோவான் நற்செய்தி, மூன்று திருமடல்கள், திருவெளிப்பாடு ஆகிய நூல்களை எழுதியவர் இவர் என்று, கிறிஸ்தவத்தில் பாரம்பரியமாக நம்பப்படுகிறது. இதில் இறையியலாளர் மத்தியில் பல்வேறு மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. புனித யோவான், திருஅவையின் தொடக்க காலத்தில் இருந்தே புனிதராகப் போற்றப்படுகிறார். செபதேயு, சலோமி தம்பதியரின் மகன் இவர். இயேசுவின் திருத்தூதர்களுள் ஒருவரான பெரிய யாக்கோபும், இவரது சகோதரர். இயேசுவின் பன்னிரு திருத்தூதர்களில் இவர் ஒருவரே, இயற்கையான மரணம் எய்தியவர் என்றும் நம்பப்படுகிறது. இயேசுவைக் காட்டிக்கொடுத்த யூதாஸ் இஸ்காரியோத்து, தற்கொலை செய்து கொண்டார். மற்ற பத்துப்பேரும், மறைசாட்சிகளாகக் கொலை செய்யப்பட்டனர். திருத்தூதர் யோவான், இவரது சகோதரர் யாக்கோபு, இவர்களின் தந்தை செபதேயு ஆகிய மூவரும், கலிலேயாக் கடலில் மீன்பிடித் தொழிலைச் செய்து வந்தவர்கள். இவ்விரு சகோதரர்களும், முதலில் திருமுழுக்கு யோவானின் சீடராக இருந்தனர். பின்னர், இயேசு, கலிலேயக் கடற்கரையில், தம்மைப் பின்பற்றுமாறு இவர்களை அழைத்தார். இவ்விரு சகோதரர்களும், தன்னிலே, அமைதியான மற்றும், அடக்கமான பண்புகளைக் கொண்டிருந்தாலும், இயேசு, இவர்களை இடியின் மக்கள் என அழைத்தார். இச்சகோதரர்களின் பொறுமை சோதிக்கப்பட்டபோது, இவர்கள் கடுஞ்சினம் கொண்டவர்களாகச் செயல்பட்டனர் என, நற்செய்தி நூல் வழியாக அறிகிறோம். இயேசு, தாம் விண்ணேற்றம் அடையும் நாள் நெருங்கி வரவே, எருசலேமை நோக்கிச் செல்லத் தீர்மானித்து, தமக்கு முன் தூதர்களை அனுப்பினார். அவருக்கு இடம் ஏற்பாடு செய்வதற்காக அவர்கள் சமாரியருடைய ஓர் ஊருக்குப் போய்ச் சேர்ந்தார்கள். அவர் எருசலேம் செல்லும் நோக்கமாயிருந்ததால், அவர்கள் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை. இதைக் கண்டு, அவருடைய சீடர்கள் யாக்கோபும் யோவானும் “ஆண்டவரே, வானத்திலிருந்து தீ வந்து இவர்களை அழிக்குமாறு செய்யவா? இது உமக்கு விருப்பமா?” என்று கேட்டார்கள். இயேசு அவர்கள் பக்கம் திரும்பி, அவர்களைக் கடிந்து கொண்டார் என லூக்கா நற்செய்தி, 9ம் பிரிவில் வாசிக்கிறோம். யோவானின் சகோதரரான திருத்தூதர் யாக்கோபு, ஏரோது அக்ரிப்பாவால் எருசலேமில் கொலை செய்யப்பட்டார். திருத்தூதராக, முதலில் மறைசாட்சியானவர் இவரே. தனது சகோதரரின் மரணத்திற்குப் பின், ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக யோவான் வாழ்ந்தார்.

இயேசு தோற்றம் மாறிய (மத்.17:1-8) நிகழ்வு உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளில், உடனிருந்த மூன்று திருத்தூதர்களுள் யோவானும் ஒருவர். இயேசு தம் சிலுவைத் துன்பங்களுக்கு முன்னர், சீடர்களுடன் எருசலேம் மாடியறையில், இறுதி இரவுணவு அருந்திய போது, இவர் இயேசுவின் மார்பில் சாய்ந்திருந்ததாக யோவான் நற்செய்தி குறிப்பிடுகிறது. திருப்பாடுகளின்போது, யோவான் துணிச்சலாக இயேசுவைப் பின்தொடர்ந்து சென்று சிலுவை அடியில் நின்றார். இயேசு சிலுவையில் உயிர்விடும் முன், தமது தாய் மரியாவைப் பாதுகாக்கும் பொறுப்பை, யோவானிடம் அளித்தார். இயேசுவின் விண்ணேற்புக்குப் பிறகு, இவர், திருத்தூதர் பேதுருவோடு இணைந்து சிறிது காலம் எருசலேமில் தங்கி நற்செய்தி அறிவித்தார். தொடக்கத்தில், திருஅவையை நிறுவி அதை வழிநடத்தியதில் யோவானுக்கு முக்கிய பங்கு உண்டு. எருசலேம் ஆலயத்திற்கு பேதுருவும் யோவானும் சென்றபோது, “அழகுவாயில்” என்னுமிடத்தில் பிச்சைக் கேட்டுக்கொண்டிருந்த, பிறவியிலேயே கால் ஊனமுற்றிருந்த ஒருவர் இவர்களிடமும் பிச்சை கேட்டார். அப்போது பேதுரு, “வெள்ளியும் பொன்னும் என்னிடமில்லை; நாசரேத்து இயேசு கிறிஸ்துவின் பெயரால் எழுந்து நடந்திடும்” என்று கூறி, யோவானுடன் சேர்ந்து அவரது வலக்கையைப் பற்றிப் பிடித்துத் தூக்கிவிட்டார். அவரும் குணமானார் (தி.ப.3,1-10). மேலும், சமாரியாவில், புதிதாக மனமாறியவர்களைப் பேதுருவுடன் சென்று பார்வையிட்டார் யோவான் (தி.பணி 8,14).

திருத்தூதர் யோவான் பற்றி, யோவான் நற்செய்தியில் ஆறு இடங்களில் சிறப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மரியாவின் விண்ணேற்புக்கு பின்னர், யோவான் எபேசு நகருக்குச் சென்று போதித்தார். அங்கிருந்துதான் அவர், மூன்று திருமடல்களை எழுதினார் என்று நம்பப்படுகிறது. கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தியதில் வல்லவரான, உரோமைப் பேரரசன் தொமீசியன் காலத்தில், உரோமையில், இவர் கொதிக்கும் எண்ணெய்க் கொப்பரையில் போடப்பட்டும், எத்தீங்கும் இன்றி உயிர் பிழைத்தார். உரோம் கொலோசேயு எனுமிடத்தில் நடந்த இந்தப் புதுமையைப் பார்த்த எல்லாரும் கிறிஸ்தவத்திற்கு மனம் மாறினர் எனக் கூறப்படுகிறது. அதன்பின், கிரேக்க நாட்டுத் தீவான பாத்மோசுக்கு யோவான் நாடு கடத்தப்பட்டார் என தெர்த்தூலியன் எழுதி வைத்துள்ளார். பாத்மோஸ் தீவில் இவர் திருவெளிப்பாடு நூலை எழுதினார். யோவானுக்கு வயதானபோது புனித பொலிக்கார்ப் அவர்களுக்குப் பயிற்சியளித்தார். இவரே பின்னாளில், துருக்கி நாட்டின் Smyrna ஆயரானார். பின்னர் புனித பொலிக்கார்ப், புனித இரேனேசுக்கும், அவர் வழியாக புனித அந்தியோக் இஞ்ஞாசியாருக்குமென யோவான் பற்றிய செய்திகள் தலைமுறை தலைமுறையாக பரவின. திருத்தூதர் யோவான் பாத்மோஸ் தீவிலேயே மரணம் அடைந்தார். யோவானின் திருப்பண்டங்கள் எதுவும் கிடைக்காததால், இவரும் உடலோடு விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கலாம் என்ற ஒரு நம்பிக்கையும் நிலவுகிறது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.