2017-03-22 16:35:00

60 கோடி குழந்தைகள், தண்ணீரின்றி தவிக்கும் நிலை உருவாகும்


மார்ச்,22,2017. இவ்வுலகில், தண்ணீர் பகிர்வில், தற்போதுள்ள நிலை நீடித்தால், 2040ம் ஆண்டுக்குள் 60 கோடி குழந்தைகள், தண்ணீரின்றி தவிக்கும் நிலை உருவாகும் என்று, UNICEF அமைப்பு வெளியிட்டுள்ள புதிய அறிக்கை கூறுகிறது.

மார்ச் 22, இப்புதனன்று சிறப்பிக்கப்படும் உலக தண்ணீர் நாளையொட்டி, ஐ.நா.வின் குழந்தைகள் நல அமைப்பான UNICEF, இவ்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

"வருங்காலத்தைப்பற்றியத் தாகம்: மாறிவரும் காலநிலையில், தண்ணீரும், குழந்தைகளும்" என்ற தலைப்பில் வெளியாகியிருக்கும் இவ்வறிக்கையில், சுற்றுச்சூழல் மாற்றங்களால், மிக விரைவிலும், மிக அதிக அளவிலும் பாதிக்கப்படுவது குழந்தைகளே என்று கூறப்பட்டுள்ளது.

சுத்தமான, பாதுகாப்பான தண்ணீர் குழந்தைகளுக்குக் கிடைக்காமல் போனால், வருங்காலமே பெரும் பாதிப்புக்களைச் சந்திக்கவேண்டியிருக்கும் என்று UNICEF தலைமை இயக்குனர், ஆந்தனி லேக் (Antony Lake) அவர்கள், இவ்வறிக்கையை வெளியிடுகையில் கூறினார்.

இன்றைய உலகில், சுத்தமான நீர் கிடைக்காத நிலையால், 66 கோடியே, 30 இலட்சம் மக்கள் துன்புறுகின்றனர் என்றும், 5 வயதுக்குட்பட்ட 800க்கும் அதிகமான குழந்தைகள், நீரினால் உருவாகும் நோய்களால், ஒவ்வொரு நாளும் இறக்கின்றனர் என்றும் UNICEF அறிக்கை கூறியுள்ளது.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.