2017-03-21 15:41:00

மனிதாபிமானம் நிறைந்த உலகை படைக்க இளையோர் முன்வருக‌


மார்ச்,21,2017. 2019ம் ஆண்டு பானமா நாட்டில் இடம்பெறவுள்ள உலக இளையோர் தினத்தை நோக்கிய பாதையில் இடம்பெறும் இவ்வாண்டு இளையோர் தினக் கொண்டாட்டங்கள், இளையோர் குறித்த உலக ஆயர் பேரவையின் தயாரிப்போடு ஒத்திணங்கிச் செல்வதாக இருக்க வேண்டும் என அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மறைமாவட்ட அளவில் இவ்வாண்டு குருத்து ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் இளையோர் தினத்திற்கென, ஒலி-ஒளி செய்தி அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார்' என்ற அன்னை மரியாவின் வார்த்தைகள், இந்த இளையோர் தினக் கொண்டாட்டத்திற்கு தலைப்பாக எடுக்கப்பட்டுள்ளதன் முக்கியத்துவத்தை எடுத்தியம்பியுள்ளார்.

வாழ்நாள் முழுவதும் தன் இதயத்தில் விசுவாசத்தைத் தாங்கிவந்த அன்னைமரியா அவர்கள், தன் உறவினர் எலிசபெத்துக்கு உதவ முன்வந்ததுபோல், இளையோரும் தங்களால் இயன்ற அளவு அன்பை பிறருக்கு வழங்க வேண்டும் என்ற அழைப்பை முன்வைத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இன்றைய இளையோர், வரலாற்றில் தங்கள் சுவடுகளைப் பதிப்பவர்களாக இருக்க வேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இளையோர் அனைவரும், தங்களின் திட்டங்கள், மனவுறுதி, கனவுகள், கொள்கைகள் ஆகியவைகளைக் கைப்பற்றியவர்களாக, முன்னோக்கி நடைபோட்டு, மனிதாபிமானம் நிறைந்த ஓர் உலகை படைக்க வேண்டும் எனவும் விண்ணப்பித்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.