2017-03-21 15:19:00

தாகமாயிருக்கும் உலகுக்கு தண்ணீரின் மதிப்பை உணர்த்துதல்


மார்ச்,21,2017. “நீர்த் தேக்கங்கள் : தாகமாயிருக்கும் உலகுக்கு தண்ணீரின் மதிப்பை உணர்த்துதல்” என்ற தலைப்பில், திருப்பீட கலாச்சார அவை, இப்புதனன்று வத்திக்கானில், கருத்தரங்கு ஒன்றை நடத்தவுள்ளது.

உலக தண்ணீர் தினமான, மார்ச் 22, இப்புதனன்று நடைபெறவுள்ள இந்த ஒருநாள் கருத்தரங்கில், கொள்கை அமைப்பாளர்கள், பல்கலைக்கழகத்தினர், தொழிலதிபர்கள், வத்திக்கானின் உயர் அதிகாரிகள் என, பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

திருப்பீட கலாச்சார அவை, Club of Rome என்ற அமைப்போடு சேர்ந்து நடத்தும் இந்தக் கருத்தரங்கிற்கு, Circle of Blue நிறுவனமும், சுற்றுச்சுழல் குறித்த உலக பொருளாதார அமைப்பும், ஒத்துழைப்பு வழங்கியுள்ளன.

முன்னணி செய்தியாளர்கள் மற்றும், அறிவியலாளர்களால் இரண்டாயிரமாம் ஆண்டில் உருவாக்கப்பட்ட Circle of Blue என்ற நிறுவனம், உலகின் நீர் வளப் பிரச்சனைகள் குறித்த தகவல்களை சேகரித்து வழங்கி வருகிறது.

1968ம் ஆண்டில், உரோமையில் ஆரம்பிக்கப்பட்ட Club of Rome என்ற அமைப்பு, உலகப் பொருளாதார அமைப்பு, சுற்றுச்சூழல் விவகாரம், காலநிலை மாற்றம் உட்பட  வருங்காலச் சமுதாயம் குறித்த பன்னாட்டு விவகாரங்கள் குறித்து கவனம் செலுத்தி வருகிறது.  

வீணாகும் தண்ணீர் என்ற தலைப்பில், 2017ம் ஆண்டின் உலக தண்ணீர் தினம், மார்ச் 22, இப்புதனன்று கடைப்பிடிக்கப்படுகின்றது. 1993ம் ஆண்டில் முதல் உலக தண்ணீர் தினம், கடைப்பிடிக்கப்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.