2017-03-18 14:47:00

திருத்தந்தை மேய்ப்புப்பணி அனுபவம் கொண்ட ஒரு மனிதர்


மார்ச்,18,2017. நற்செய்தியை மகிழ்வுடன் அறிவித்தல் பற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் திருத்தூது அறிவுரை மடல், முழுவதும் மேய்ப்புப்பணியை மையமாகக் கொண்டிருக்கும் ஏடு என்றும், திருத்தந்தையோடு உரையாடுகையில், மேய்ப்புப்பணி அனுபவம் கொண்ட ஒரு மனிதராக, அவரைப் பார்க்க முடிந்தது என்றும், கானடா நாட்டு ஆயர்கள் தெரிவித்தனர்.

ஆயர்களின் அத் லிமினா சந்திப்பையொட்டி, மார்ச் 16, இவ்வியாழனன்று, கானடா நாட்டின் அட்லாண்டிக் பகுதியின் பத்து ஆயர்களும், திருப்பீடத்தில், திருத்தந்தையோடு 90 நிமிடங்கள் கலந்துரையாடினர்.

இச்சந்திப்பு குறித்த அனுபவத்தை, CNS கத்தோலிக்க ஊடகத்திடம் பகிர்ந்துகொண்ட, கானடாவின் Edmundston ஆயர் Claude Champagne அவர்கள், நற்செய்தியின் மகிழ்வு  என்ற திருத்தூது அறிவுரை மடலை எழுதிய ஒருவரை, அனுபவத்தால் தன்னால் காண முடிந்தது என்று கூறினார்.

ஆயர்களாகிய நாங்கள் சொல்ல விரும்பியதை திருத்தந்தை மிகுந்த ஆர்வத்துடன் கேட்டார் எனவும், ஆயர் பணியில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும், மிகுந்த விருப்பத்துடன் திருத்தந்தை பகிர்ந்து கொண்டார் எனவும் தெரிவித்தார், ஆயர் Champagne.

மேலும், திருத்தந்தையுடன் இடம்பெற்ற இச்சந்திப்பு பற்றி பகிர்ந்து கொண்ட, மற்றுமோர் ஆயர் Peter J. Hundt அவர்கள், ஒரு மூத்த சகோதரருடன் இருந்த உணர்வு ஏற்பட்டது என்றார்.

ஏறக்குறைய ஒரு மணி நேரம் ஆனதும், ஆயர்களில் சிலர் தங்களின் கைக்கடிகாரங்களில் மணியைப் பாரத்தனர், அப்போது திருத்தந்தை, நீங்கள் போக வேண்டுமா? எனக் கேட்டார், ஆனால், ஆயர்களோ, திருத்தந்தைக்கு நேரமாகின்றது என நினைத்தோம் என்று கூறினர், அப்போது திருத்தந்தை, ஒன்றும் அவசரமில்லை, எனக்கு நேரமிருக்கின்றது எனத் தெரிவித்தார், என்றார் ஆயர் Hundt.

கானடா ஆயர்கள், தங்களின் அத் லிமினா சந்திப்பில், திருப்பீடத்தின் பல துறைகளையும் பார்வையிட்டனர். இச்சந்திப்பு, இச்சனிக்கிழமையன்று நிறைவுற்றது. 

ஆதாரம் : CNS / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.