2017-03-18 14:42:00

திருத்தந்தை தலைமையேற்று நடத்திய பாவ மன்னிப்பு வழிபாடு


மார்ச்,18,2017. 'இறைவனோடு 24 மணி நேரங்கள்' என்ற பக்தி முயற்சியின் ஒரு பகுதியான ஒப்புரவு அருளடையாள வழிபாட்டை, மார்ச் 17, இவ்வெள்ளி மாலை 5 மணிக்கு, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நடத்தினார்.

இவ்வழிபாட்டில், நற்செய்தி வாசகத்திற்குப் பின்னர், மறையுரை வழங்காமல், ஏறக்குறைய பத்து நிமிடங்கள், திருத்தந்தை அமைதியாகச் செபித்தபோது, இதில் பங்கு கொண்ட விசுவாசிகள் அனைவரும் மிக அமைதியாகச் செபித்துக்கொண்டிருந்தனர்.

பின்னர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பேதுரு பசிலிக்காவில் ஓர்  அருள்பணியாளரிடம், ஏறக்குறைய நான்கு நிமிடங்கள் ஒப்புரவு அருளடையாளத்தைப் பெற்றார். அதன் பின்னர், திருத்தந்தை, மூன்று ஆண்கள் மற்றும், நான்கு பெண்களுக்கு, ஏறக்குறைய ஐம்பது நிமிடங்கள், ஒப்புரவு அருளடையாளத்தை நிறைவேற்றினார்.

அதேநேரம், பசிலிக்காவில் ஆயர்கள், அருள்பணியாளர்கள் என, 95 பேர் இந்த அருளடையாளத்தை நிறைவேற்றினர். இவ்வேளையில், சிஸ்டீன் சிற்றாலய இசைக் குழுவினர், மெல்லிய இசையை வழங்கிக் கொண்டிருந்தனர்.

ஒப்புரவு அருளடையாளத்தைப் பெறுவதற்குத் தயாரிப்பாக, 28 கேள்விகள் கொண்ட ஒரு சிறிய கையேடு விசுவாசிகளுக்கு வழங்கப்பட்டிருந்தது.

'இரக்கத்தையே விரும்புகிறேன்' (மத்.9:13) என்ற சொற்கள், இவ்வாண்டின் 'இறைவனோடு 24 மணி நேரங்கள்' முயற்சிக்கு மையக்கருத்தாக அமைந்துள்ளன.

இதற்கிடையே, இவ்வெள்ளி காலையில், அருள்பணியாளர்களுக்கு ஆற்றிய உரையில், ஒப்புரவு அருளடையாளத்தை நிறைவேற்றுவதற்கு, அருள்பணியாளர்கள் எப்போதும் தாராள மனதுடன் முன்வரவேண்டுமென்று திருத்தந்தை கேட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.