2017-03-18 15:17:00

கர்தினால் Vlkன் இறப்புக்கு திருத்தந்தை இரங்கல்


மார்ச்,18,2017. செக் குடியரசின் Prague நகரின் முன்னாள் பேராயர் கர்தினால் Miloslav Vlk அவர்கள், மரணமடைந்ததையொட்டி, தனது அனுதாபங்களைத் தெரிவிக்கும் இரங்கல் தந்தியை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

பிராக் நகர் பேராயர் கர்தினால் Dominik Duka அவர்களுக்கு, இத்தந்திச் செய்தியை அனுப்பியுள்ள திருத்தந்தை, திருஅவைக்கு எதிராக இடம்பெற்ற அடக்குமுறைகளிலும், அரசு அதிகாரிகளால் இவர் தனிமைப்படுத்தப்பட்ட காலங்களிலும், நற்செய்திக்கு மகிழ்வுடன் இவர் வழங்கிய துணிச்சலான சான்று வாழ்வைப் பாராட்டியுள்ளார்.

விசுவாசிகளைப் புதுப்பிக்கும் பணியில், தூய ஆவியாருக்கு இவர் பணிந்து நடந்த முறைகளையும் பாராட்டியுள்ள திருத்தந்தை, இவரின் பிரிவால் வருந்தும் குடும்பத்தினர் மற்றும், மறைமாவட்ட விசுவாசிகளுக்கு, தனது ஆறுதலையும் தெரிவித்துள்ளார்.

கர்தினால் Miloslav Vlk அவர்கள், தனது 84வது வயதில் இச்சனிக்கிழமையன்று இறைவனடி சேர்ந்தார்.

1932ம் ஆண்டு மே 17ம் தேதி, Líšnice நகரில் பிறந்த கர்தினால் Miloslav Vlk அவர்கள், வாகனத் தொழிற்சாலை உட்பட, பல்வேறு அரசுத் துறைகளில் பணியாற்றிய பின்னர், பிராக் புரட்சியின்போது, 1968ம் ஆண்டு, ஜூன் 23ம் நாள், தனது 36வது வயதில் அருள்பணியாளராகத் திருப்பொழிவு செய்யப்பட்டார். உடனடியாக இவர், České Budějovice நகர் ஆயருக்குச் செயலராக நியமிக்கப்பட்டார்.

மக்கள் மத்தியில் இவரின் செல்வாக்கு மற்றும், மேய்ப்புப்பணி நடவடிக்கைகளைக் கண்ட அரசு அதிகாரிகள், 1971ம் ஆண்டில், České Budějovice நகரைவிட்டு கட்டாயமாக இவரை வெளியேற்றினர். உள்ளூர் கம்யூனிச கட்சியினரின் ஒத்துழைப்புடன், 1978ம் ஆண்டில், இவரின் குருத்துவப்பணியை அரசு அதிகாரிகள் தடை செய்தனர்.

1978ம் ஆண்டு முதல், 1986ம் ஆண்டு வரை அந்நகரில், ஜன்னல்களைச் சுத்தம் செய்யும் வேலை செய்தார் கர்தினால் Vlk.. அதோடு, இவர், பிராக் நகரிலிருந்து செக்கோஸ்லோவாக்கிய அரசு வங்கியின் மாவட்ட ஆவணக் காப்பகத்திலும் வேலை செய்தார். 1988ம் ஆண்டு டிசம்பர் வரை பிராக் நகரில் மறைந்த வாழ்வு வாழ்ந்த இவர், 1989ம் ஆண்டு சனவரி முதல் தேதி, பரிசோதனை முறையில் அருள்பணியாளர் பணியைச் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டார்.

கம்யூனிச வீழ்ச்சிக்குப் பின்னர், 1990ம் ஆண்டில் České Budějovice நகர் ஆயராகவும்,  1991ம் ஆண்டில், பிராக் பேராயராகவும், 1994ம் ஆண்டில் கர்தினாலாகவும் நியமிக்கப்பட்டார் கர்தினால் Vlk..

கர்தினால் Miloslav Vlk அவர்கள், பல்வேறு கவுரவ பட்டங்களைப் பெற்றிருப்பவர், பல்வேறு முக்கிய பொறுப்புக்களையும் கொண்டிருந்தவர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.